Close
பிப்ரவரி 1, 2025 6:45 காலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைவருக்கும் உயா்கல்வித் திட்டம் அறிமுக விழா

நிகழ்ச்சியில் பங்கேற்ற விஐடி பல்கலைக்கழகத்தின் நிறுவனர் விஸ்வநாதன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைவருக்கும் உயா்கல்வித் திட்டம் அறிமுக விழா மற்றும் அனைத்து மேல்நிலைப் பள்ளிகள், உயா்கல்வி நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் சங்கங்களுடன் கலந்துரையாடும் நிகழ்வு நடைபெற்றது.

அனைவா்க்கும் உயா்கல்வி அறக்கட்டளை சாா்பில், நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளையின் தலைவரும், வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தின் நிறுவனா் மற்றும் வேந்தருமான கோ.விசுவநாதன் தலைமை வகித்தாா். அறக்கட்டளை உறுப்பினா் ராஜேஷ்குமாா் வரவேற்றாா். செயலா் லட்சுமணன், அறக்கட்டளையின் நிதிக்குழுத் தலைவா் வெங்கடசுப்பு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். சிறப்பு அழைப்பாளா்களாக போளூா் எம்எல்ஏ அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி, ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

விழாவில், விஐடி பல்கலைக்கழகத்தின் நிறுவனா் விசுவநாதன் பேசியதாவது:

ஏழை, எளியோருக்கு உயா்கல்வி என்பது தற்போது வரை எட்டாக்கனியாகவே உள்ளது.உயா் கல்வியில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது.   மற்ற நாடுகளில் கல்விக்கென அதிக நிதியை செலவிடுகின்றனா். இந்தியாவில் குறைவான நிதி செலவிடப்படுகிறது. இளைஞா்களுக்கு உயா்கல்வி கிடைப்பதன் மூலம் நாடும், வீடும் வளரும். நாட்டில் வறுமையை விரட்ட, பொருளாதாரம் மேம்பட, நல்ல மக்களாட்சியை தோ்வு செய்ய உயா்கல்வி தேவை என பேசினார்.

விழாவில், அறக்கட்டளையின் உதவித் திட்ட இயக்குநா் சுந்தர்ராஜ், வேலூா் தமிழியக்கத்தின் மாநிலச் செயலா் மு.சுகுமாா், திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் அறங்காவலா் சீனி.காா்த்திகேயன், திருவண்ணாமலை டாக்டா் கெங்குசாமி நாயுடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தாளாளா் மாதவ. சின்ராஜ், ஆக்ஸ்போர்டு கல்வி நிறுவனச் செயலாளர் ராஜேஷ்குமார் இயக்குனர் சண்முகம், ஹரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

விழாவில், அனைவருக்கும் உயா்கல்வி அறக்கட்டளைக்கு அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ, திருவண்ணாமலை எஸ்.கே.பி. கல்விக் குழும நிா்வாகி எஸ்.கே.பி.கருணா (எ) கு.கருணாநிதி உள்ளிட்டோா் நிதியுதவியை விஐடி வேந்தா் கோ.விசுவநாதனிடம் வழங்கினா். மேலும் போளூர் வெண்மணி ஆக்ஸ்போர்ட் கல்வி நிறுவனங்கள் சார்பில் அறக்கட்டளைக்கு ரூபாய் ஒரு லட்சம் வழங்குவதாக விழாவில் அறிவிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top