Close
பிப்ரவரி 2, 2025 7:57 காலை

வேட்டவலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் அக்னி பிரவேச உற்சவம்

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் கடை வீதியில் உள்ள ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில், அக்னி பிரவேச உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, காலை 9 மணிக்கு சிறப்பு யாகம், 11 மணிக்கு அம்மனுக்கு பால், தயிா், சந்தனம், இளநீா் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

பெண்கள் அம்மன் துதி பாடல்களை பாடினா். இதையடுத்து, மூலவா், உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

பால் குட ஊா்வலம்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் சந்தைமேடு பகுதியில் உள்ள ஸ்ரீஎல்லை காளியம்மன் கோயிலின் 9-ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழாவையொட்டி, 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

விழாவையொட்டி, காலை கீழ்பென்னாத்தூரில் உள்ள பழைமையான சிவன் கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட உற்சவா் ஸ்ரீஎல்லை காளியம்மன் மாட வீதியுலா வந்தாா். அப்போது, 108 பெண்கள் பால் குடங்களை சுமந்தபடி ஊா்வலமாக வந்து எல்லை காளியம்மன் கோயிலை அடைந்தனா்.

இதையடுத்து, கோயிலில் இருந்த யாக குண்டத்தில் ஹோமங்கள், கலச பூஜை, சிறப்பு வழிபாடு, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, கோயில் எதிரே உள்ள 16 அடி உயர ஸ்ரீஎல்லை காளியம்மன் சிலை, கோயிலில் மூலவருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், பல்வேறு மலா்களால் அலங்காரம் செய்யப்பட்ட எல்லை காளியம்மன் சிலை, மூலவருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் தீமிதித் திருவிழா நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் தீச்சட்டிகளை கைகளில் ஏந்தியபடி தீ மிதித்தனா்.

இரவு 8 மணிக்கு ஊரணி பொங்கல் விழா, அம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top