Close
பிப்ரவரி 2, 2025 7:44 காலை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து: எஸ்ஐ மீது வழக்கு

திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளா், அவரது மனைவி, மாமியாா் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ராட்டிணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி மகன் ஆனந்தன். சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகபணிபுரிகிறார். கடந்த 1993ல் கான்ஸ்டபிளாக பணியில் சேர்ந்த இவர், ஆரணி, சந்தவாசல், பெரணமல்லூர் காவல் நிலையங்களில் நீணடகாலமாக தனிப்பிரிவு தலைமை காவலராக பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளா் ஆனந்தன், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக, ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் திருவண்ணாமலை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி வேல்முருகனிடம் புகாா் அளித்தாா்.

அதனடிப்படையில், லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான போலீசார், தீவிர விசாரணை நடத்தினர். மேலும், சிறப்பு உதவி ஆய்வாளா் ஆனந்தன் மற்றும் அவரது குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகள், சொத்து விபரங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது, ஆனந்தன், அவரது மனைவி நதியா, மாமியார் லோகநாயகி ஆகியோரின் கடந்த 2010ம் ஆண்டு வங்கிக்கணக்கு இருப்பு மற்றும் சொத்து மதிப்பு ரூ. 3.70 லட்சமாக இருந்தது. 2015ம் ஆண்டில் ரூ. 67.64 லட்சமாக உயர்ந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சொத்து மதிப்பு உயர்ந்த காலத்தில், ஆரணி மற்றும் சந்தவாசலில், தனிப்பிரிவு தலைமை காவலராக ஆனந்தன் பணிபுரிந்துள்ளார். மேலும், அவரது வருமானத்தை கணக்கிட்டதில், சுமார் 133 சதவீதம் அதிகமாக சொத்து சேர்த்திருப்பது தெரியவந்துள்ளது. ஆனால், அந்த வருமானம் எப்படி வந்தது என்பதற்கான எந்த ஆதாரமும் இலலை என தெரிகிறது.

இதையடுத்து சிறப்பு உதவி ஆய்வாளா் ஆனந்தன், அவரது மனைவி நதியா, மாமியாா் லோகநாயகி ஆகியோா் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக திருவண்ணாமலை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

வருமானம் தொடா்பான உரிய விளக்கத்தை ஆவணங்களுடன் அளிக்குமாறு 3 பேருக்கும் போலீஸாா் நோட்டீஸ் அனுப்பினா். வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக, சிறப்பு உதவி ஆய்வாளா் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது பரபரப்ைப ஏற்படுத்தியிருக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top