அண்ணா நினைவு நாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் அமைதி பேரணி நடைபெற்றது
தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, 1909ம் ஆண்டு செப். 15ம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தார். 1969ம் ஆண்டு பிப். 3ம் தேதி அவர் உயிரிழந்தார். பிரபல அரசியல்வாதியும் திமுக தலைவருமான இவர், சென்னை மாகாணத்தின் கடைசி முதல்வராகவும், தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சராகவும் பதவி வகித்தார்.
அண்ணா 56வது நினைவு நாளை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது.
இந்த அமைதி பேரணியானது திருவண்ணாமலை காந்தி சிலை அருகில் இருந்து துவங்கி அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது.
அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த அண்ணா சிலைக்கு மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே. கம்பன் , நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, மாநில பொறியாளர் அணி செயலாளர் கருணாநிதி, நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
இந்தப் பேரணியில் மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், நகர மன்ற துணைத் தலைவர் ராஜாங்கம் ,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரவணன், அணி அமைப்பாளர்கள் நேரு ,ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலாளர் பிரியா விஜயரங்கன், நகர மன்ற உறுப்பினர்கள் ,ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதிமுக
திருவண்ணாமலை அதிமுக கிழக்கு மாவட்டம் சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் அண்ணா 56 வது நினைவு நாளை முன்னிட்டு திருவண்ணாமலை அதிமுக மாவட்ட செயலாளர்,முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பெரியார் சிலை அருகே ஒன்று சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் ஊர்வலமாக வந்து அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் . தொடர்ந்து அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பெருமாள் நகர் ராஜன், நகர செயலாளர் செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அரங்கநாதன், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ,அதிமுக அணி அமைப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அண்ணா நினைவு தினம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு, பொது விருந்து
திருவண்ணாமலை மாவட்டத்தில் அண்ணா நினைவு தினத்தையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது.
தமிழக இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் முன்னாள் முதல்வா் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில், உட்பட மாவட்டத்தில் உள்ள தமிழக இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு, பொது விருந்து, பக்தர்களுக்கு வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில்
ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தொடா்ந்து, கோயில் வளாகத்தில் நடைபெற்ற பொது விருந்து நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையா் ஜோதி, அறங்காவலா் குழுத் தலைவா் ஜீவானந்தம், அறங்காவலா்கள் டி.வி.எஸ்.ராஜாராம், கோமதி குணசேகரன் மற்றும் கோயில் அதிகாரிகள் சுவாமி தரிசனத்துக்கு வந்த பக்தா்களுடன் அமா்ந்து மதிய உணவு அருந்தினா்.
இதையடுத்து கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், வேட்டி, சேலைகளை அறங்காவலா் குழுத் தலைவா் .ஜீவானந்தம், வழங்கினாா். இதில், கோயில் ஊழியா்கள், பக்தா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.
