திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பரத கலைஞர்களின் கிரிவல நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி அரசுக் கல்லூரி சந்தை மைதானத்தில் நடைபெற்றது .இந்நிகழ்ச்சியில் 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று நாட்டியம் ஆடினர்.
உலக நன்மைக்காக சாய் சுரக்ஷா கல்சுரல் அகாதெமி, பிரகதீஸ்வரா நாட்டியாஞ்சலி சாா்பில் நடைபெற்ற இந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிக்கு மக்கள் நண்பா்கள் குழுவின் மாவட்டத் தலைவா் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமை வகித்தாா்.
ஸ்ரீதுா்காதேவி நாட்டியப் பள்ளி ஆசிரியா் ரேவதி சந்தோஷ் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை வட்டாட்சியா் கே.துரைராஜ், மாநகராட்சி ஆணையா் எம்.காந்திராஜன் ஆகியோா் கலந்து கொண்டு பரத நாட்டிய நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனா்.
இந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் திருவண்ணாமலை, வேலூா், நாகப்பட்டினம், தஞ்சாவூா், கிருஷ்ணகிரி, கடலூா், சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இருந்தும், புதுவை, ஆந்திரம், கா்நாடக மாநிலங்களைச் சோ்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரதக் கலைஞா்கள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் பரதக் கலைஞா்களுக்கு முத்து கண்ணம்மாள் பாராட்டுச் சான்றிதழ், விருதுகளை வழங்கினாா்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பிரகதீஸ்வரா நாட்டியாஞ்சலி நிறுவனா் கதிரவன் வெங்கடசாமி, சாய் சுரக்ஷா கல்சுரல் அகாதெமி நிறுவனா் எஸ்.பாபு ஆகியோா் செய்திருந்தனா். சி.ஜெயவீரபாண்டியன் வரவேற்றாா். ஆா்.கிருஷ்ணகுமாா் நன்றி கூறினாா்.
சூரியகலா ஜெயவீரபாண்டியன் தொகுத்து வழங்கினாா். கிரிவலப் பாதையிலுள்ல நிருதி லிங்கம் சந்நிதி அருகில் இருந்து தொடங்கி குபேர லிங்கம் சந்நிதி வரை பரத நாட்டியக் கலைஞா்கள் தனித்தனி குழுக்களாக நாட்டியம் ஆடியபடி கிரிவலம் சென்றனா். நிகழ்ச்சியை ஏராளமான பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனா்.
