Close
பிப்ரவரி 23, 2025 10:42 காலை

ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் திருவண்ணாமலை வருகை தின திருவிழா

ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் திருவண்ணாமலை வருகை தின திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

திருவண்ணாமலையின் அற்புதங்கள் பலவற்றில் 3 முக்கியமானது என்பார்கள். அது அண்ணாமலையார், ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள், ஸ்ரீ ரமண மகரிஷி என்று ஆன்றோர்கள் கூறுவார். திருவண்ணாமலையை மேலும் ஜொலிக்கச் செய்த ரத்தினம் சேஷாத்ரி சுவாமிகள்.

இவர் காஞ்சிபுரத்தில் 22.1.1870 அன்று அஸ்த நட்சத்திரத்தில் வரதராஜன் – மரகதம் தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்தார். சிறுவயது முதலே பக்தியும் ஆன்ம விசாரணையுமாக வாழ்ந்தவர் இவர்.

இவரது தாயார் மரணப்படுக்கையில் ‘அருணாசல.. அருணாசல..அருணாசல..’ என்று மும்முறை கூறிவிட்டு உயிர் துறந்தார். யார் அந்த அருணாசலம் என்று பார்க்க கிளம்பினார் சேஷாத்ரி. தனது 19 – ம் வயதில் திருவண்ணாமலையை நோக்கி தனது பயணத்தை தொடங்கினார்.

மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் முதன் முதலில் திருவண்ணாமலைக்கு வருகை தந்த தினமான ரதசப்தமி அன்று ஒவ்வொரு வருடமும் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில் சிறப்பு விழா நடைபெறும்.

அந்த வகையில் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில் ரதசப்தமி தினத்தை முன்னிட்டு 136 ஆம் ஆண்டு மகான் வருகை திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழா சிறப்புகள் குறித்து ஆசிரம தலைவர் லாயர் சந்திரமோகன் கூறுகையில்,

ரத சப்தமி, இது ஏதோ ஒரு ஆன்மீக நிகழ்வு மட்டும் அல்ல. இந்த நாள் சூரியன் தனது சுழற்சியை வடக்கு நோக்கி நகர்த்தும் நாள்.

சூரியனின் தேரில் உள்ள ஏழு குதிரைகள் வாரத்தின் ஏழு நாட்களைக் குறிக்கிறது. ரதத்தில் உள்ள 12 சக்கரங்கள் பன்னிரெண்டு ராசிகளைக் குறிக்கின்றன. சூரியன் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு ராசியில் பயணித்து திரும்பி வருவதற்கு ஒரு வருடம் ஆகிறது.

ரத சப்தமி நாள் சூரியனிடமிருந்து ஆற்றலைபெறும் விழாவாகும். ஒவ்வொரு ஜீவாத்மாவும் தனது பாவம் போக்கி பரமாத்மாவுடன்  கலப்பதற்கு தனது பேராற்றலால் துணை நிற்பது சூரியன்.

நெருப்பு எப்படி பாகுபாடின்றி சுட்டெரிக்கும்  வல்லமை உடையதோ அப்படியே சூரிய பகவானும் தன்னை வழிபடும்  ஜீவாத்மாவை பாகுபாடின்றி பாவம் போக்கி பரமாத்மாவோடு கலக்கச்செய்வார்.

அம்புப்படுக்கையில் கண்ட பீஷ்மர் வியாசர்  வழியாய்   ரதசப்தமியின்  பெருமை உணர்ந்து  பாவம் கழித்து பரிபூரணம் அடைந்ததாய் இதிகாசம் இதன் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது. அருளாளர்கள் அக்னிதலமான அண்ணாமலையை, திருவண்ணாமலையை    நாடி வந்தது அதனால்தான்.

இந்த ரதசப்தமி நாளில், கலசபாக்கம் தீர்த்தவாரிக்கு அருள்மிகு அண்ணாமலையார்  சென்றதும், இந்த நாளின் சிறப்புணர்ந்து, இயற்கையை புரிந்துணர்த்து, அறிவியலை அறிந்துணர்ந்து மிகச் சரியாக, துல்லியமாக, உள்ளொளியோடு அனல்மிகு அண்ணாமலை திருமண்ணை ரதசப்தமி நாளிலேயே வணங்கி அண்ணாமலைக்குள் மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் அடியெடுத்து வைத்ததும் ஒன்றாய்அரங்கேறியது,

இந்நிகழ்வு தந்தை தன் மகனை வாரி அணைத்து வரவேற்றது போல் அமைந்தது வேறு எவருக்கும் இல்லாத சிறப்பு. 1889 ஆம் ஆண்டு முதல் 1929 ஆம் ஆண்டு வரை 40 ஆண்டுகள் திருவண்ணாமலையிலேயே இருந்து பல அற்புதங்களை நிகழ்த்தியவர். பகவான் ரமணரை இவ்வுலகிற்கு அடையாளம் காட்டியவர் ஆவார் என்றார்.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த மகான் வருகை தின திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. மேலும் விழாவில் சுவாமி தரிசனம் செய்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு இனிப்புடன் கூடிய சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top