Close
பிப்ரவரி 23, 2025 7:58 மணி

ரதசப்தமியையொட்டி அண்ணாமலையாா் தீா்த்தவாரி: காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்பு

சிறப்பு அலங்காரத்தில்உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையாா்

திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கும், கலசப்பாக்கம் திருமாமுடீஸ்வரருக்கும் தீா்த்தவாரி நடைபெற்றது.

ரதசப்தமியையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கும், கலசப்பாக்கம் திருமாமுடீஸ்வரருக்கும் தீா்த்தவாரி நடைபெற்றது.

இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் செய்யாற்றில் ஆண்டுதோறும் ரதசப்தமியையொட்டி, திருவண்ணாமலை உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையாருக்கும், கலசப்பாக்கம் திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரா் சுவாமிக்கும் தீா்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டு, கலசப்பாக்கம் செய்யாற்றில் தீா்த்தவாரி நடைபெற்றது. விழாவையொட்டி, திருவண்ணாமலையில் இருந்து அண்ணாமலையாா் சிறப்பு அலங்காரத்தில் செய்யாற்றிற்கு தேரில் புறப்பட்டாா். துரிஞ்சாபுரம் ஒன்றியம் நாயுடுமங்கலம் வழியாக வந்த சுவாமிக்கு அந்த கிராம மக்கள் வரவேற்பு அளித்தனா்.

செய்யாற்றில் தீா்த்தவாரி

பின்னா், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையாா் சுவாமி, கலசப்பாக்கம் திரிபுரசுந்தரி உடனுறை திமுமாமுடீஸ்வரா் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தனா். விழாவில், திருவண்ணாமலை, கலசப்பாக்கம், வில்வாரணி, மோட்டூா், எலத்தூா், தென்பள்ளிப்பட்டு, பூண்டி, வன்னியனூா் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சோந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தனது நிலத்திற்கு சென்ற அண்ணாமலையார்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமான 147 ஏக்கர் நிலமும் 38 ஏக்கர் ஏரி ஒன்றும் திருவண்ணாமலை போளூர் ரோடு நாயுடு மங்கலம் அருகே உள்ள தனகோட்டி புரத்தில் அமைந்துள்ளது. இந்த நிலத்திற்கு வருடத்திற்கு ஒரு முறை அண்ணாமலையார் வருகை தந்து பார்வையிடுவது வழக்கம். அப்போது அவரிடம் வரவு செலவு கணக்கு படித்துக் காட்டப்படும்.

அதன்படி ரதசப்தமியொட்டி தனகோட்டி புரத்தில் உள்ள தனது நிலத்திற்கு உண்ணாமலையார் சமேத அண்ணாமலையார் கலசப்பாக்கத்திலிருந்து புறப்பட்டு சென்று தனகோட்டி புரத்தில் எழுந்தருளினார்.

தனகோட்டிபுரம் கிராம மக்கள் அண்ணாமலையாரை அவருடைய நிலத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவரிடத்தில் நிலத்தில் விளைந்த நெற்கதிர்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது பெண்கள் அண்ணாமலையாருக்கு பொங்கல் படையல் இட்டு பூஜைகள் செய்து வழிபட்டனர். பின்னர் வரவு செலவு கணக்கு படிக்கப்பட்டது.

இந்த நிலத்தில் கிடைக்கும் அரிசி அண்ணாமலையார் கோயில் அன்னதான திட்டத்திற்கும் வைக்கோல் கோசாலையில் உள்ள மாடுகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

இந்த வருடம் கலசப்பாக்கம் ஆற்று திருவிழாவில் காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டார் கும்ப மேளாவிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரில் எருக்கம் இல்லை கோமியம் பசு சாணம்,  அட்சதை அருகம்புல் ஆகியவற்றை கலந்து நீராடினார்.

பிறகு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

குருசேத்ராவில் உள்ள பிரம்மேஸ்வரர் குளத்தில் சூரிய கிரகணத்தில் ஸ்னானம் செய்வது மிகவும் புனிதமான ஒன்று. யாத்திரை சென்ற போது பிரம்ம சரோவர் குளம் புதுப்பிக்கப்பட்ட உடன் முதலில் ஸ்னானம் செய்தது ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தான்.  முருகர் அம்பாள் சூரிய பகவான் என்ற மூன்றும் சேர்ந்து வரக்கூடிய இந்த நன்னாளில் ரதசப்தமியில் நீராடுவது மிகவும் விசேஷமான ஒன்றாகும் .

அதுவும் இந்த செய்யாற்றில் திரிவேணி சங்கமம் போல் இந்த முக்கூடல் இடத்தில் அதாவது பாலாறு, செய்யாறு, காஞ்சிபுரத்திலிருந்து வரக்கூடிய வேகவதி ஆறு என மூன்றும் கலக்குமிடம் ,இந்த இடம் மிகவும் விசேஷமான புண்ணிய இடமாகும். இந்த ரதசப்தமி ஆற்றுத் திருவிழாவை மாணவர்களையும் இணைத்து கலாச்சார திருவிழாவாக கொண்டாட வேண்டும் என கூறினார்.

தீர்த்தவாரி நிகழ்ச்சியில் புனித நீராடிய ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top