கிரஷர் உரிமையாளர்கள் முறையாக பர்மிட் வழங்காத நிலையில் தங்களை காவல்துறை கைது செய்யும் நடவடிக்கையை தவிர்க்க வேண்டும் எனவும், தவறு செய்யும் கிரஷர் ஆலை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு கனரக வாகன ஓட்டுனர் நல சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தமிழகம் முழுவதும் கட்டுமான பணிகளுக்கான முக்கிய பொருள்களாக விளங்கும் ஜல்லி, எம்சாண்ட் உள்ளிட்ட பொருட்களை நாள்தோறும் கனரக லாரிகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கனரக வாகனங்கள் இது போன்ற கட்டுமான பொருட்களை ஏற்றி செல்லும் நிலையில் கிரஷர் ஆலை உரிமையாளர்கள் லோடு ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு முறையாக பர்மிட் வழங்காமலும் , அதில் தேதி நேரம் அளவு என எதையும் சரியாக குறிப்பிடாமல் வழங்கும் நிலையில் அதனை வாடிக்கையாளருக்கு எடுத்து செல்லும்போது வழியில் கனிமவளத்துறை மற்றும் காவல் துறையினர் வாகன சோதனையில் தடுத்து நிறுத்தி ஓட்டுனர் முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறி வாகன ஓட்டுனர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்து சிறை செல்லும் அளவிற்கு நேரிடுகிறது.
இதனை தவிர்க்க வேண்டும் என கூறியும், தவறு செய்யும் கிரஷர் ஆலை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்குமாறு, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ், தமிழ்நாடு கனரக வாகன ஓட்டுநர் நல சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா, மாநில தலைவர் அண்ணா சுரேஷ் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வியை சந்தித்து மனுக்கள் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய யுவராஜ், 25 ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்து இதனால் ஒரு ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்டார் எனவே கிரஷர் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்ய முறையை முறைப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் வானகரம் ஓட்டுநர் நந்தகுமார் கூறுகையில், கிரஷர் தொழிற்சாலையில் வழங்கப்படும் பாஸ் என்பதில் குறிப்பிடப்படும் விவரங்களை அதிகம் படிக்காத ஓட்டுநர்கள் எவ்வாறு அறிந்து கொள்ள இயலும்? இதனால் தவறு செய்யும் கிரஷர் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கிறோம் என தெரிவித்தார்.