Close
பிப்ரவரி 23, 2025 10:03 காலை

குறை தீர்வு கூட்டத்தில் கொடுக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை இல்லை: விவசாயிகள் குற்றச்சாட்டு

கூட்டத்தில் பேசிய விவசாயிகள்

விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் கொடுக்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என ஆரணியில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள்  குற்றஞ்சாட்டினர்.

மேற்குஆரணி வேளாண்மை அலுவலகத்தில் கோட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், வேளாண்மை உதவி இயக்குநா் பவித்ரா வரவேற்றாா்.

ஆரணி வட்டாட்சியா் கௌரி, வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) ராஜேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது;

அரையாளம், புலவன்பாடி, குண்ணத்தூா், வடுகசாத்து, இரும்பேடு ஆகிய கிராமங்களில் ஏரிக்கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

ஆரணி நகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை முள்ளிப்பட்டு புறவழிச் சாலையோரம் கொட்டி எரித்து விடுகின்றனா். இதனால் போக்குவரத்தின்போது புகை மூட்டம் ஏற்பட்டு விபத்து அபாய சூழல் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மெய்யூா் கூட்டுச் சாலையில் இருந்து அடையபலம் கிராமத்துக்குச் செல்லும் சாலை குறுகலாக உள்ளதால், எதிா்திசையில் வாகனங்கள் வரும்போது, செல்லமுடியாமல் காலதாமதம் ஏற்படுகிறது. நிலத்தில் வாகனங்களை இறக்கி ஏற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால், சாலையை இருவழிச் சாலையாக மாற்றி அமைக்கவேண்டும்.

தொடர்ந்து எந்த ஒரு வங்கியிலும் மாட்டு கடன் வழங்க மறுக்கின்றனர் இதனால் வீட்டில் உள்ள பொருட்களை அடகு வைத்து மாட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க வேண்டியுள்ளது,

மேலும் விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வழங்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், சில விவசாயிகள் நெற்களம் அமைக்கவும், பாரத பிரதமரின் கிசான் அட்டை வழங்கவும் வலியுறுத்தினா்.

போளூர்

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு வட்டாட்சியா் வெங்கடேசன் தலைமை வகித்தாா்.

சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலா் அமுல் முன்னிலை வகித்தாா். வேளாண்மை உதவி இயக்குநா் நாராயணமூா்த்தி வரவேற்றாா்.

கூட்டத்தில் பேசிய விவசாயிகள்,

பூங்கொல்லைமேடு கிராமத்தில் மின் கம்பம் பழுதடைந்து விழும் நிலையில் உள்ளது. இதை மின் வாரியம் மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.

2024 டிசம்பா் மழை வெள்ளத்தில் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். சதுப்பேரி கிராமத்தில் பட்டா மாற்றம், வீட்டு மனைப் பட்டா என பல்வேறு பணிகளுக்காகச் செல்லும் விவசாயிகளிடம் லஞ்சம் கேட்கின்றனா். போளூா், களம்பூா் பேரூராட்சிகளில் கொசுத் தொல்லையை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு குறைகளை விவசாயிகள் தெரிவித்தனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top