திருவள்ளூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மோட்டார் சைக்கிள் சென்ற ஆந்திர மாநில வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வெங்கடநரசிம்ம ராஜவாரி பேட்டை,ரெட்டி குண்டா, தடுக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 27). முரளி பூந்தமல்லியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.
நேற்று இரவு அவர் வழக்கம் போல முரளி வேலையை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் பூந்தமல்லியில் இருந்து ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் திருவள்ளூர் அருகே உள்ள பட்டரைப் பெருமந்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர் திசையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த முரளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்
மேலும் அந்த அடையாளம் தெரியாத வாகனம் திருவள்ளூர் அடுத்த திருவாலங்காட்டை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இதில் படுகாயம் அடைந்த திருநாவுக்கரசை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற அடையாளம் தெரியாத வாகன ஒட்டி யார் என விசாரித்து வருகின்றனர்.