Close
பிப்ரவரி 22, 2025 9:25 காலை

விவசாயிகள் போராட்டம் எதிரொலி: ஒரு வாரத்தில் பாக்கி தொகை வழங்க கரும்பு ஆலை நிர்வாகம் உறுதி

114 கோடி ரூபாய் கரும்புக்கான நிலுவைத் தொகையினை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வியாழக்கிழமை 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்ட முற்றுகைப் போராட்டம் வெற்றியில் முடிவடைந்தது.

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநில அரசின் ஆதரவு விலை 101 கோடி ரூபாய் மற்றும் 2004-2005 மற்றும் 2008-2009 ஆம் ஆண்டுக்கான லாபத்தில் 50 சதவீத பங்கு தொகையான 13 கோடி ரூபாய் என மொத்தம் 114 கோடி ரூபாய் கரும்புக்கான நிலுவைத் தொகையினை வழங்க வலியுறுத்தி பிப்ரவரி 6ஆம் தேதி வியாழக்கிழமை முண்டியம்பாக்கம் ராஜஸ்ரீ சர்க்கரை ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரும்பு விவசாயிகள் சங்கத்தின் கௌரவ தலைவர் முன்னாள் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி தலைமையில் கரும்பு விவசாயிகள் முண்டியம்பாக்கம் ராஜஸ்ரீ சர்க்கரை ஆலையினை 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட ஆலையை நோக்கி முற்றுகையிட செல்ல முயன்றார்,

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஏடிஎஸ்பி தினகரன் தலைமையிலான 50- க்கும் மேற்பட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கரும்பு விவசாயிகள் ஆலை நிர்வாகம் நேரில் வந்து பேச வேண்டும், இல்லையேல் அங்கிருந்து செல்ல மறுத்து தரையில் அமர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து ஆலை நிர்வாகத்தினர் நேரில் வந்து கௌரவ தலைவர் முன்னாள் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ராமமூர்த்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆலை நிர்வாகத்தினர் ஒரு வாரத்தில் பாக்கி தொகை கொடுத்து விடுவதாக உறுதி அளித்தனர்,

இதனையேற்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு கலைந்து சென்றனர்.

போராட்டத்தில் கட்சி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன்,கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேல்மாறன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட தலைவர் தாண்டவராயன், மாவட்ட பொருளாளர் ராமன், மாநில குழு உறுப்பினர் கதிரேசன், மாவட்ட துணைத் தலைவர் மாதவன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top