ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விற்பனை செய்து வந்த வட மாநில வாலிபர் கோபிரூபிடஸ் வீட்டில் வைத்திருந்த 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காஞ்சிபுரம் மதுவிலக்கு காவல்துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையை தடுத்திடும் வகையில் மதுவிலக்கு காவல்துறையினர் பல்வேறு வகையில் சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக வட மாநில பகுதிகளில் இருந்து அப்பகுதி வாலிபர்கள் ரயிலில் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்வதாக வந்த தகவலை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரயில்வே நிலையங்களில் கண்காணிப்பு பணிகளை தீவிர படுத்தினர்.
அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம், சுங்குவார்சத்திரம் பகுதிகளில் வட மாநில வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்வதாக அந்த தகவலை எடுத்து அப்பகுதி முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்ட காஞ்சிபுரம் மதுவிலக்கு காவல்துறையினர் மேற்கு வங்காளம், பாங்குரா சேர்ந்த வாலிபர் கோபிரூபிடஸ் மீது சந்தேகப் பார்வை விழுந்து அவரின் செல்போன் எண் கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் மேற்கு வங்காளத்திலிருந்து கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக மொத்தமாக கஞ்சாவை வாங்கி ரயில் மூலம் எடுத்து வந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடம் , ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் ஆகிய இடங்களில் பாக்கெட் போட்டு ஒரு பாக்கெட் 500 ரூபாய் என்று சில்லறை விற்பனை செய்வதாக அவர் ஓப்பு கொண்டார்.
அதன் பேரில் ஒரகடம் கண்டிகை சந்திப்பில் அவர் தங்கியிருந்த அறைக்கு சென்று சோதனை செய்தபோது தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 1.500 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து மேற்படி கோபிரூபிடஸை கைது செய்து ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.