திருவண்ணாமலையில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்க முயன்ற போது பணி செய்ய விடாமல் தடுத்த பெண்கள் மற்றும் பொதுமக்களை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்டக்கு நாச்சிப்பட்டு பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி வசித்து வந்துள்ளனர்.
நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடம் என்பதால் இந்த இடத்தினை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்பு செய்த இடங்களை அகற்றி தன்வசம் வைத்திருந்த நிலையில், தொடர்ந்து அப்பகுதி மக்கள் மீண்டும் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மேலும் தாங்கள் இந்த இடத்தை காலி செய்ய வேண்டுமென்றால் மாவட்ட நிர்வாகம் தங்களுக்கு வேறு இடம் பார்த்து பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் . வழக்கை விசாரிக்க நீதிமன்றம் நெடுஞ்சாலை துறைக்கு இடம் சொந்தம் என்பதால் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் , உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி நெடுஞ்சாலைத்துறை தன் வசம் வைத்துக் கொள்ளலாம் எனவும் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவின் பேரில் கடந்த அக்டோபர் மாதம் நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்பு அகற்ற முயற்சி செய்தபோது பொதுமக்கள் போராட்டம் நடத்தியதன் பேரில் தற்காலிகமாக ஆக்கிரமிப்பு அகற்றும் முயற்சி கைவிடப்பட்டது.
தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்களுக்கு நான்கு முறை கால அவகாசம் அளித்தனர். மாவட்ட நிர்வாகம் வழங்கிய கால அவகாசத்தை பொருட்படுத்தாமல் ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட நிலையில், உதவி கோட்ட பொறியாளர் அன்பழகன் , உதவி பொறியாளர் சசிகுமார் ஆகியோர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், காவல்துறையினர் உதவியோடு ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க ஜேசிபி இயந்திரங்களை கொண்டு சென்றனர்.
ஜேசிபி இயந்திரம் மூலம் வீடுகளை இடிக்க முயற்சித்த போது ஆக்கிரமிப்பாளர்களுக்கும் நெடுஞ்சாலை துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் திண்டிவனம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து அதிகாரிகள் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் வீடுகளை இடித்து அகற்றினா்.
இதையொட்டி, 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.