திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் மற்றும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசியதாவது;
தமிழ்நாடு முதலமைச்சர் உரிய வழிகாட்டுதலின்படி செய்யாறு அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சீரும் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் கல்வித்துறையின் மீது அதிகமான பங்களிப்பை அரசின் மூலம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக மொத்த பதிவு விகிதம் என்று குறிப்பிடுகின்ற பொழுது தமிழ்நாட்டில் தான் இந்திய அளவில் கல்வி நிறுவனங்களின் 18 வயது முதல் 30 வயது வரை உள்ள அதிக அளவிலான மாணவர்கள் கல்வி கற்கின்றனர். அந்த வகையில் கல்வி மட்டும் அல்லாது அவர்களுக்கு உரிய வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும் என்கின்ற உயரிய நோக்கில் இத்தகைய தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இந்த வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுவதற்கு தமிழ்நாடு முதல்வரின் ஆளுமையின் கீழ் நடைபெறுகின்ற நிர்வாக நடவடிக்கையும் காரணம். இது போன்ற முகாம்கள் தொடர்ந்து நடைபெறும், எனவே மாணவர்கள் வேலை நாடுனர்கள் இம் முகாமினை நன்கு பயன்படுத்திக் கொண்டு வேலை வாய்ப்பு பெற வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என ஆட்சியர் பேசினார்.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் 151 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. இமுகாவில் 910 ஆண்கள் 1351 பெண்கள் என மொத்தம் 2261 பேர் பங்கேற்றனர்.
இதில் 482 பேர் தனியார் நிறுவனங்கள் மூலம் பணி நியமனங்கள் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் செய்யாறு சார் ஆட்சியர் பல்லவி வர்மா, திட்ட இயக்குனர் சரண்யா தேவி, உதவி இயக்குனர் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலர் காந்தி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் மோகன்ராஜ், கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.