திருவண்ணாமலையில் தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரும் தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளருமான வேலு தலைமையில் திருவண்ணாமலை நகரினில் தூய்மைப்படுத்தும் நோக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தூய்மை அருணை திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் நகரத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள அனைத்து விதமான குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மாட வீதி மற்றும் நகரில் முக்கிய பகுதிகளில் சாலைகளை தூய்மைப்படுத்தும் பணியும் கால்வாய்களை தூய்மைப்படுத்தும் பணிகளையும் தூய்மை அருணை அமைப்பாளர்களுடன் இணைந்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தூய்மை பணியில் ஈடுபட்டார்.
தொடர்ந்து வார்டு எண் 38 மற்றும் 36, 37 பகுதிகளில் நடைபெற்று வரும் தூய்மை பணிகளையும் வார்டு எண் 17 பகுதியில் நடைபெற்று வரும் கால்வாய் அடைப்பு தூய்மை பணிகளையும், வார்டு எண் 12 பகுதியில் நடைபெற்று வரும் கால்வாய் தூர் வாரும் பணிகளையும் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும் திருவண்ணாமலை மாநகரை எப்பொழுதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் கால்வாய்களில் ஏற்படும் அடைப்புகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு, அறிவுறுத்தி கூறினார்.
நிகழ்ச்சியில் தூய்மை அருணை மேற்பார்வையாளர்கள் எ.வ.வே.கம்பன், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜய ரங்கன், ஒருங்கிணைப்பாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், தூய்மை அருணை வார்டு பொறுப்பாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.