Close
பிப்ரவரி 22, 2025 9:58 மணி

ஈசானிய குளத்தில் நடந்த தீர்த்தவாரி: சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அருணாசலேஸ்வரர்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு தீா்த்தவாரி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

ஈசானிய குளம், அய்யங்குளம், தாமரைகுளம், கலசபாக்கத்தில் செய்யாறு, மணலூர்பேட்டையில் தென்பெண்ணை ஆற்றில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சிகளில் அருணாசலேஸ்வரர் கலந்துகொள்வார். அதன்படி தை பௌர்ணமியையொட்டி,  திருவண்ணாமலை ஈசானிய குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி காலையில் கோவிலில் அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.

தொடர்ந்து மேளதாளத்துடன் கோவிலில் இருந்து அம்பாளுடன் அருணாசலேஸ்வரர் ஈசானிய குளத்திற்கு வந்தார். அங்கு சூலரூபமான அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அப்போது பால், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது..

கோயிலில் இருந்து துக்க செய்தியை எடுத்து வரும் கோயில் பணியாளர்

இந்நிலையில் அருணாச்சலேஸ்வரர் ஈசானிய குள தீா்த்தவாரி முடிந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தபடியே, உற்சவா் ஸ்ரீ அருணாசலேஸ்வரர் மீண்டும் கோயிலுக்குப் புறப்பட்டாா். அப்போது அருணாச்சலேஸ்வரருக்கு கோயில் ஓதுவார் ஒரு செய்தியை படித்து காண்பிப்பார் . அதாவது அருணாச்சலேஸ்வரரை தம்முடைய மகனாக பாவித்து வழிபட்ட வள்ளால மகாராஜா, போரில் உயிரிழந்த செய்தியை ஓலைச்சுவடி மூலமாக சுவாமிக்கு வாசித்து அறிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

உடனடியாக மேளதாளங்கள் நிறுத்தப்பட்டு அமைதியாக அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு திரும்பினார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

வரலாற்று கதை

அருணாசலேஸ்வரர் கோவில் வரலாற்று கதையின்படி திருவண்ணாமலை பகுதியை ஆண்டு வந்த வல்லாள மகாராஜா என்ற மன்னர் அருணாசலேஸ்வரரின் தீவிர பக்தர் ஆவார். வல்லாள மகாராஜாவுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அருணாசலேஸ்வரரிடம் அவர் தனது மனைவியுடன் தினமும் மனமுருக குழந்தை வரம்கேட்டு வேண்டி வந்து உள்ளார்.

ஒரு நாள் வல்லாள மகாராஜாவின் கனவில் தோன்றிய அருணாசலேஸ்வரர் உனக்கு இந்த பிறவியில் குழந்தை பாக்கியம் இல்லை. என்னையே மகனாக பாவித்து கொள். இந்த பிறவியில் நானே உனது மகன் என்று கூறியுள்ளார். அதன்படி ராஜாவும் அருணாசலேஸ்வரரை தனது மகனாக பாவித்து சிறந்த முறையில் ஆட்சி புரிந்து வந்துள்ளார்.

தை மாத பௌர்ணமி தினத்தையொட்டி அருணாச்சலேஸ்வரர் ஈசான குளக்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும் போது போருக்கு சென்றிருந்த வல்லாள மகாராஜா அங்கு உயிரிழந்த செய்தி கோயில் பணியாளர் மூலம் அருணாச்சலேஸ்வரருக்கு தெரிவிக்கப்படும்.

அதன் பிறகு மேள தாளங்கள் நிறுத்தப்பட்டு அருணாச்சலேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரங்கள் கலைத்து அமைதியான முறையில் துக்கத்துடன் கோயிலுக்கு திரும்பினார். என்பது புராண வரலாறு.

இதன் காரணமாக, ஆண்டுதோறும் தீா்த்தவாரி முடிந்தபிறகு உற்சவா் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் மேள-தாளங்கள் இல்லாமல் கோயிலுக்குச் செல்வது வழக்கம். அதன்படியே, ஈசான்ய குளத்தில் இருந்து மேள-தாளங்கள் இல்லாமல் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்குச் சென்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மாா்ச் 12-இல் திதி கொடுக்கும் நிகழ்வு:

வள்ளால மகாராஜா இறந்த பிறகு தந்தைக்கு மகன் செய்ய வேண்டிய திதி கொடுக்கும் நிகழ்வை அருணாசலேஸ்வரா் செய்தாா் என்பது வரலாறு.

அதன்படி, வரும் மாா்ச் 12-ஆம் தேதி மாசி மகத்தன்று திருவண்ணாமலையை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கெளதம நதியில் நடைபெறும் தீா்த்தவாரியில் அருணாசலேஸ்வரா் கலந்து கொண்டு வள்ளால மகாராஜாவுக்கு திதி கொடுக்கும் நிகழ்வு நடைபெறுகிறது.

தீர்த்தவாரி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top