திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். அண்ணாமலையார் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று இரவு 7.59 மணிக்கு தொடங்கி இன்று 12ம் தேதி இரவு 8.16 மணிக்கு பௌர்ணமி நிறைவு பெறுகிறது.
நேற்று முன்தினம் மாலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். இரவு 9 மணிக்கு பிறகு கிரிவல பக்தர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்காக அதிகரித்தது. கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கி.மீ. தூரமும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது. கிரிவலப்பாதையில் அமைந்துள்ள அஷ்டலிங்க சன்னதிகள், அடி அண்ணாமலை திருக்கோயில், இடுக்குப் பிள்ளையார் கோயில்களை வழிபட்டபடி பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
தை மாத பவுர்ணமியை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மனுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நேற்று அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை நடை அடைப்பு இல்லாமல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் ஆகியவை நேற்று முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது தரிசனம் மட்டும் ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்படுகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகரித்திருப்பதால், தரிசன வரிசையில் சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.