Close
பிப்ரவரி 23, 2025 9:14 காலை

பெருநகர் செய்யாற்றில் 23 கிராமங்களை சேர்ந்த சுவாமிகள் எழுந்தருள கோலாகலமாக நடைபெற்ற தைப்பூசம்

தைப்பூசத் திருவிழாவை ஒட்டி பெருநகர் செய்யாற்றில் 23 கிராமங்களை சேர்ந்த சுவாமிகள் வண்ணமலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் எழுந்தருள லட்சக்கணக்கான மக்கள் கடும் பனியையும் பொருட்படுத்தாது சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

தை மாதம் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடிவரும் நாள் தைப்பூசத் திருநாளாக தமிழர்களால் சிறப்பாக , தமிழ் கடவுள் என கூறப்படும் முருகனுக்காக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நாளில் முருகன் திருத்தலங்களில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும், பாதயாத்திரையாக திருத்தலங்களுக்கு மேற்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துவர்.

அவ்வகையில் உத்தரமேரூர் வட்டம் பெருநகர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு பட்டுவதனாம்பிகை சமேத பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தின் தைப்பூச பெருவிழா கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றத்தினை தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பத்தாம் நாள் தைப்பூசம் அன்று செய்யாற்றில் 23 கிராமங்களை சேர்ந்த சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு ரிஷப வாகனங்களில் எழுந்தருள்வார்கள்.

அவ்வகையில் இன்று அதிகாலை பெருநகர், கீழத்தப்பாக்கம், மடிப்பாக்கம், ஆக்கூர், கூழமந்தல், மானாம்பதி, ஆலத்தூர் , தேத்துறை உள்ளிட்ட 23 கிராமங்களை சேர்ந்த ஈசன், பார்வதி , விநாயகர் , முருகன் ஆகியோருடன் பல்வேறு மலர் மாலைகள் சூடி ரிஷப வாகனத்தில் செய்யாற்றில் எழுந்தருளினர்.

இதனைக் காண நேற்று இரவு 10 மணி முதலே லட்சக்கணக்கான மக்கள் பெருநகர் செய்யாற்றில் குவிந்தனர். ஒவ்வொரு கிராம சுவாமிகளும் வரும்போது தீப ஆராதனை செய்து வழிபட்டனர் இறுதியாக அனைத்து சாமிகளும் ஒரு சேர அணிவகுத்து வட்டம் போல் நிற்க வாண வேடிக்கையும் அதனை தொடர்ந்து சிறப்பு தீபாராதனையும் நடந்தது.

தைப்பூச திருநாளில் ஒரே நாளில் 23 கிராமங்களை சேர்ந்த சுவாமிகளை பக்தர்கள் தரிசித்து இறையருள் பெற்று மகிழ்ந்தனர். ஒவ்வொரு கிராம சுவாமிகளும் சிறப்பான மல்லி, மயில் தோகை, பன்னீர்ரோஜா உள்ளிட்ட மலர்களால் அலங்கரிக்கப்பட்டு எழுந்தருளிய காட்சி சிறப்பாக அமைந்தது.

விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை நூற்றுக்கும் மேற்பட்ட காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினர் சிறப்பாக மேற்கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top