தென்னிந்தியாவில் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வெளிமாநில, வெளிமாவட்ட பக்தர்கள் வருகிறார்கள். வாரஇறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், அமாவாசை போன்ற நாட்களில் பல்லாயிரம் பக்தர்களும், பௌர்ணமியன்று லட்சக்கணக்கிலும் பக்தர்கள் வந்து அண்ணாமலையாரை வணங்கிவிட்டு கிரிவலம் வருகிறார்கள்.
நேற்று புதன் கிழமை தை பௌர்ணமி தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் 5 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் பரம்பரையாக அபிஷேகம் மற்றும் தலைமை குருக்கள் ஆக இருக்கும் ரமேஷ் குருக்களை பார்த்து கோயில் இணை ஆணையர் ஜோதி புரோக்கர் வேலை பார்க்கிறீர்களா? என்று கேள்வி கேட்டதால் கோவிலில் நடைபெற்ற அனைத்து பூஜைகளையும் நிறுத்திவிட்டு சிவாச்சாரியார்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கோயில் யாகசாலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தை தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் கோயில் ஊழியர்கள் உள்துறை அலுவலகத்தில் அரங்காவலர் குழுவினருடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேச்சு வார்த்தை நடத்தி , சிவாச்சாரியார்களை சமாதானம் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சிவாச்சாரியார்கள் ,தலைமை குருக்களுக்கு இந்த நிலை என்றால் சாதாரண குருக்களுக்கு என்ன நிலைமை ஏற்படும்? இணை ஆணையர் நிர்வாகத்தில் நாங்கள் தலையிடவில்லை. எங்களுடைய உரிமையை தான் நாங்கள் கேட்கிறோம். இவ்வளவு கூட்டம் வருவதற்கு காரணமே நாங்கள் பூஜை செய்த பதம் தான் என சிவாச்சாரியார்கள் ஆவேசமாக கூறினார்கள்
மேலும் அறங்காவலர் குழுவினர் கோயில் இணை ஆணையரிடம் உரிய தகவலை கேட்டு பதில் அளிப்பதாகவும் தற்போது பூஜைகளை தொடர்ந்து செய்யுமாறும் கூறியதால் சிவாச்சாரியார்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர்.
தை மாத பௌர்ணமி தினமான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில் சிவாச்சாரியாருக்கும் கோவில் இணை ஆணையருக்கும் ஏற்பட்ட தகராறு குருக்கள் அனைவரும் தங்கள் பணிகளை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் சிறிது நேரம் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.