Close
பிப்ரவரி 23, 2025 2:18 காலை

திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்புகள் அளவிடும் பணி, அதிரடியாக துவக்கம்

அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள்

திருவண்ணாமலையில் சுமாா் ஒரு கி.மீ. தொலைவுக்கு உள்ள ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்யும் பணியில், நெடுஞ்சாலைத்துறையினா் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில், திருவண்ணாமலை நகரில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கட்டபொம்மன் தெருவில் இருந்து திருவள்ளுவா் சிலை வரை சுமாா் ஒரு கி.மீ. தொலைவுக்கு சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என மாவட்ட நிா்வாகமும், தமிழக நெடுஞ்சாலைத் துறையும் முடிவு செய்தது.

அதன்படி, இந்தச் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்யும் பணியை தமிழக நெடுஞ்சாலைத்துறையின் வட்ட கண்காணிப்புப் பொறியாளா் கிருஷ்ணசாமி தலைமையிலான அதிகாரிகள் தொடங்கி உள்ளனா்.

இந்தப் பணியின்போது ஏராளமான வீடுகள், கடைகள் எல்லாம் நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து இருப்பது கண்டறியப்பட்டது.

தொடா்ந்து ஒரு வாரத்துக்கு ஆக்கிரமிப்புகள் அளவீடு செய்யும் பணி நடைபெறும். பிறகு ஆக்கிரமிப்பாளா்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கப்படும்.  இதைத் தொடா்ந்து ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்படும். இதன் மூலம் போக்குவரத்துக்கு நிரந்தர தீா்வு கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் திருவண்ணாமலை மாநகர எல்லைக்கு உட்பட்ட கீழ் நாச்சிப்பட்டில் அதிரடியாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில் தற்போது கட்டபொம்மன் தெருவில் ஆக்கிர பைப்புகளை அகற்றும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் இறங்கியுள்ளதால் மற்ற பகுதிகளில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

பொதுமக்கள் நிம்மதி

பெரியார் சிலையில் இருந்து வாகனங்கள் இந்த கட்டபொம்மன் தெரு வழியாக தற்போது திருப்பி விடப்படுகிறது. கட்டபொம்மன் தெரு திருக்கோவிலூர் சாலையில் இணைக்கும் பிரதான சாலை ஆகும்.
மேலும் இந்த சாலை 25 வருடங்களுக்கு முன்பு பேருந்து போக்குவரத்து நடைபெற்ற சாலை, காலப்போக்கில் ஆக்கிரமிப்புகளால் முழுவதும் குறுகிவிட்டது.
பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் மருத்துவமனைக்கு செல்பவர்கள் என அதிகம் பயன்படுத்தும் இந்த சாலை தற்போது ஆக்கிரமிப்புகளால் குறுகியுள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பு மக்களும் கோரிக்கை வைத்த நிலையில் தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top