திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் சிறப்பான வகையில் தரிசனம் செய்யும் பொருட்டு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு தெரிவிக்கையில்;
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் சிறப்பான வகையில் தரிசனம் செய்வதற்கு ஏதுவாக வட ஒத்தவாட தெருவில் மேற்கூரை அமைத்து பக்தர்களுக்கு இருக்கை வசதிகள் உடன் கூடிய குடிநீர் வசதிகளை ஏற்படுத்திட வேண்டும். தரிசனம் முடித்து வெளியே வரும் பக்தர்களை பே கோபுரம் வழியாக விரைவாக வெளியில் வருவதற்கு ஏதுவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .
மேலும் தமிழ்நாடு மின்சார வாரியம் மூலமாக திருவண்ணாமலை மாநகர உட்பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பொருட்டு கட்டபொம்மன் தெரு மற்றும் ராமலிங்கனார் தெருவில் உள்ள மின் கம்பங்களை அகற்றி புதை வட கம்பிகளாக மாற்றிட வேண்டும். கல் நகர் கோபால் நாயகன் தெரு, ஆடுதொட்டி தெருவில் உள்ள சாலைகளை விரிவு படுத்த வேண்டும் என அறிவுறுத்தி கூறினார்.
மாவட்ட ஆட்சியரும் மாவட்ட எஸ்பியும் இணைந்து மேற்கண்ட நடவடிக்கைகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேற்கண்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வதன் மூலமாக பொதுமக்களுக்கு ஏற்படும் இடர்பாடுகள் தவிர்க்க ஏதுவாக அமையும் என அமைச்சர் வேலு கூட்டத்தில் தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், திருக்கோயில் இணை ஆணையர் ஜோதி ,மாநகராட்சி ஆணையர் காந்திராஜ், வட்டாட்சியர்கள், நெடுஞ்சாலை துறை, மின்சார துறை, ஊரக வளர்ச்சி துறை, வருவாய்த்துறை அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள், அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.