திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் மற்றும் மேல்வில்வராயநல்லூர் கிராமங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் நகைகளை அடகுவைத்து கறவை மாடு பராமரிப்புப் கடன் பெற்றனா்.
பின்னா், அவா்கள் நகைகளை திரும்பப் பெற சங்கச் செயலா் கிருஷ்ணமூா்த்தியை அணுகியபோது, அவா் நகைகளை திரும்பத் தராமல் இழுத்தடித்துள்ளாா். இதனால் விவசாயிகள் மாவட்ட துணைப் பதிவாளரிடம் புகாா் அளித்தனா்.
இதையடுத்து, நகைகளை சரிபாா்த்தபோது, 80-க்கும் மேற்பட்டவிவசாயிகளின் நகைகள் போலியானது என கண்டறியப்பட்டது. இதனால் செயலா் கிருஷ்ணமூா்த்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
அவா் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. கூட்டுறவு கடன் சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். மேலும், அவரது சொத்துக்கள் முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், பூண்டி, திருவண்ணாமலை, பழங்கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கூட்டுறவு கடன் சங்க செயலாளருக்கு சொந்தமான சுமார் ரூபாய் 2 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மேல்வில்வராயநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நேற்று ஏலம் விடப்பட்டது. விற்பனை அலுவலர் சுரேஷ்குமார் முன்னிலையில் ஏலம் விடும் பணி நடந்தது.
இந்த ஏலம் கேட்க சொத்து மதிப்பில் 2 சதவீதம் வைப்புத்தொகை ரூபாய் 4 லட்சம் செலுத்த வேண்டும். ஆனால், ஏலம் கேட்க யாரும் வராததால் இருக்கைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
இதையடுத்து, மோசடியில் சிக்கிய சங்க செயலாளருக்கு சொத்துக்களை சங்கத்தின் பெயருக்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூட்டுறவு கடன் சங்க அதிகாரிகள் கூறுகையில், `ஏலம் கேட்க விருப்பம் உள்ளவர்கள் ரூபாய் 4 லட்சம் வைப்புத்தொகை செலுத்தி இருக்க வேண்டும். ஆனால், யாரும் வைப்புத்தொகை செலுத்தவில்லை. மேலும், ஏலம் கேட்க யாரும் வராததால் சங்க செயலாளரின் சொத்துக்கள் மேல்வில்வராய நல்லூர் கூட்டுறவு கடன் சங்கத்தின் பெயருக்கு மாற்றப்படும்’ என்றனர்.
தொடர்ந்து, விவசாயிகள் தங்களது நகைகளை மீட்டுத்தர வேண்டும் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 2 முறை சமரச கூட்டம் நடந்தும்கூட எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
மீண்டும் வரும் 22ம் தேதிக்குள் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று சமரச கூட்டம் நடத்த ஏற்பாடு செய்வதாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் விவசாயிகளிடம் உறுதியளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.