திருவண்ணாமலையில் அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு கால சாதனை விளக்க துண்டு பிரசுரத்தை முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் இருசக்கர பேரணியாக வந்து பொதுமக்களுக்கு வழங்கினார்.
திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அதிமுக அம்மா பேரவை சார்பில், அதிமுக ஆட்சியில் பொதுமக்கள், வியாபாரிகள், மாணவர்களுக்கு செய்த சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி அதிமுக கிழக்கு மாவட்ட அம்மா பேரவை மாவட்ட செயலாளர் பெருமாளா நகர் கே.ராஜன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு விநியோகம் செய்தார்.
இந்த பேரணி அண்ணா நுழைவு வாயிலிருந்து மத்திய பேருந்து நிலையம், பெரியார் சிலை, அண்ணா சிலை, காந்தி சிலை, தேரடி வீதி வழியாக காமராஜர் சிலை வரை 1000 மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் செல்ல முயன்ற போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் அதிமுகவினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி 1000 மேற்பட்ட இருசக்கர வாகன மூலம் பேரணியாக சென்றனர். மேலும் வேலூர் சாலையில் இருந்து நடை பயணமாக சென்று காய்கறி வியாபாரிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பேருந்து பயணிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
இந்நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் அன்பழகன்,நகர செயலாளர் ஜே.செல்வ மாமன்ற உறுப்பினர்கள் சந்திர பிரகாஷ் ஜெயின், பழனி, நரேஷ், சிவில் சீனிவாசன், மாவட்ட மாணவரணி செயலாளர் சத்திய சிவகுமார், மாவட்ட துணை செயலாளர் அரங்கநாதன், அம்மா பேரவை மாவட்ட தலைவர் இளவழகன், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தராஜ், ஆடையூர் சரவணன், வாணாபுரம் சங்கர், ஜெயபிரகாஷ், நகர செயலாளர்கள் செல்வமணி, முருகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை பொறுப்பாளர்கள், சார்பு அணி மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு அமைப்பு நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர்.