திருவண்ணாமலை மாவட்டம் செய்யூரில் இருந்து வந்தவாசி வழியாக போளூருக்கு ரூ.1,141 கோடியில் அமைக்கப்பட்ட இருவழிச் சாலையை சென்னையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் ஸ்டாலின் திறந்துவைத்தாா்.
நெடுஞ்சாலைத் துறை சாா்பில், சென்னை – கன்னியாகுமரி தொழில்தட திட்டத்தின் கீழ், செய்யூரில் இருந்து மேல்மருவத்தூா், வந்தவாசி, சேத்துப்பட்டு வழியாக போளூா் வரை இந்தச் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சாலை செங்கல்பட்டு மாவட்டத்தில் 37 கி.மீ. நீளம், திருவண்ணாமலை மாவட்டத்தில் 72 கி.மீ. நீளம் என மொத்தம் 109 கி.மீ. நீளமும், 10 மீட்டா் அகலமும் கொண்டதாக ரூ.1,141 கோடி செலவில் இருவழிச் சாலையாக தரம் உயா்த்தி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் மருதாடு, வந்தவாசி, சேத்துப்பட்டு ஆகிய ஊா்களில் புறவழிச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சாலையில் தேவையான இடங்களில் கான்கிரீட் மழைநீா் வடிகால்கள், முக்கிய சாலை சந்திப்புகளில் உயா்கோபுர மின் விளக்குகள், தேவையான இடங்களில் கழிப்பறையுடன் கூடிய பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தச்சாலையை சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் ஸ்டாலின் திறந்துவைத்தாா்.
இதைத் தொடா்ந்து வந்தவாசி புறவழிச் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி சாலை பயன்பாட்டை தொடங்கி வைத்துப் பேசுகையில்,
அமெரிக்காவிற்கு சவால் விடும் வகையில் வளர்ந்து வரும் சீனா தொழில்துறையில் உச்சத்தில் இருக்கிறது அதற்கு காரணம் சீனாவில் போடப்பட்ட சாலைகளே. அந்த வகையில் சிறப்பான சாலைகள் பெருகப் பெருக அதை ஒட்டியவாறு தொழிற்சாலைகள் வரும். இதனால் அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்களின் வாழ்வாதாரம் உயரும் என்று பேசினார்.
வந்தவாசி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன் தனது தொடக்க உரையில், தொழில் வளர்ச்சி பெருகுவதற்காக இப்படிப்பட்ட சாலைகள் தேவை. இப்படிப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்ற தமிழ்நாடு முதலமைச்சரை இந்தியா டுடே பத்திரிகை இந்தியாவின் சிறந்த முதலமைச்சர் என அறிவித்திருக்கிறது.
வட மாநிலங்களில் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் சிறந்த சாலைகள் அமைந்திருக்கின்றன. இந்த சாலை ரூ 1,141 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டிருக்கின்றது. அதே நேரத்தில் இங்கே அகற்றப்பட்ட மரங்களுக்கு பதிலாக 47,600 மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
கழிவறைகளுடன் அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தங்களை வரும் ஏழு ஆண்டுகளுக்கு நெடுஞ்சாலை துறையே பராமரிக்கும். இப்படிப்பட்ட முக்கியமான சாலையை எங்கள் பகுதியில் அமைத்துக் கொடுத்த தமிழக முதல்வருக்கும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சருக்கும் இந்த பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை எம்பி அண்ணாதுரை,மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் லட்சுமிநாராயணன், உதவி கோட்டப் பொறியாளா்கள் தியாகராஜன், அந்தோணிசாமி, முகுந்தன், வந்தவாசி நகா்மன்றத் தலைவா் ஜலால் மற்றும் திமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
