Close
ஏப்ரல் 17, 2025 12:30 காலை

உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட அரசு அலுவலர்கள்

டி ஆர் ஓ தலைமையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட அரசு அலுவலர்கள்

திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் இரா. இராம்பிரதீபன் தலைமையில் மாவட்ட ஆட்சிய ர் அலுவலக வளாகத்தில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழியினை அரசு அலுவலர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

உலகத் தாய்மொழி நாளாக 1999ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 21ஆம் நாளை யுனஸ்கோ நிறுவனம் அறிவித்தது. உலகத் தாய்மொழி நாள் சிறப்பினை அனைவரும் அறியும் வகையில் 21.02.2024 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் சட்டப்பேரவை தலைவர் முன்னிலையில் தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உலகத் தாய்மொழி நாள் உறுதி மொழியினை எடுத்துக்கொண்டனர்.

அதன்படி, 2025ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் பிப்ரவரி 21 உலகத் தாய்மொழி நாளன்று அனைத்து அரசு அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இணைப்பில் உள்ள உலகத் தாய்மொழிநாள் உறுதிமொழியினை தவறாது எடுக்க வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பின்வரும் உறுதிமொழியினை வாசிக்க அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எப்போதும் தமிழ் என்ற நடைமுறையைக் கொண்டுவரப் பாடுபடுவோம். தேமதுர தமிழோசை உலகெங்கும் ஒலிக்க எந்நாளும் உழைத்திடுவோம். ஆனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பமிடுவோம். குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் சூட்ட பரப்புரை செய்திடுவோம். இணையற்ற தமிழுடன் இணையத் தமிழையும் காத்து வளர்ப்போம் என்று உலகத் தாய்மொழி நாளான இன்று உளமாற உறுதி கூறுகிறேன் என்று அரசு அலுவலர்கள் அனைவரும் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) பார்த்திபன், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் (பொ) செந்தில்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top