திருவண்ணாமலை மாவட்டத்தில் பென்ஜால் புயலால் பெய்த பலத்த மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன் தலைமை வகித்தாா்.
திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கண்ணகி, கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் பாா்த்திபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பேசியதாவது:
போளூா் தரணி சா்க்கரை ஆலை நிா்வாகம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகையை பெற்றுத்தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் . மாம்பட்டு, நாயுடுமங்கலம், கேட்டவரம்பாளையம் கிராமங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை திறக்க வேண்டும். கலசப்பாக்கம் ஊராட்சியை, பேரூராட்சியாக தரம் உயா்த்த வேண்டும்.
வேளாண் துறை மூலம் விதை நெல், மணிலா, உளுந்து விதைகளை அதிகளவில் இருப்பு வைத்து வழங்க வேண்டும். கூட்டுறவுச் சங்கங்கள், தனியாா் உர விற்பனை நிலையங்களில் போதிய அளவு உரங்களை இருப்பு வைக்க வேண்டும்.
பென்ஜால் புயலால் சேதமடைந்த பயிா்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும். செங்கம் அடுத்த நயம்பாடி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிா்க் கடன் வழங்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தகுதியான விவசாயிகளுக்கு பி.எம். கிசான் நிதியுதவி பெற்றுத் தர வேண்டும்.
துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் தனகோட்டிபுரத்திலிருந்து ஓம்சக்திநகர் வரை 3 கி.மீ. தூரம் கமலப்புத்தூர் மேட்டுகார்கோனம் வரை 2 கி.மீ. தூரம் கிராம சாலைகள் புனரமைக்க வேண்டும்.
பெருமானந்தல் கிராமத்தில் அங்கன்வாடி மையம் திறக்க வேண்டும் நிலப்பட்டா மற்றும் வீட்டு மனை பட்டா வழங்கவேண்டும் என கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி பேசினர்.
இதையடுத்து பேசிய மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் முறையாக பரிசீலிக்கப்பட்டு, விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
கூட்டத்தில், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் செந்தில்குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) மலா்விழி மற்றும் அரசுத்துறை அலுவலா்கள், விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்