Close
மார்ச் 3, 2025 2:56 மணி

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உண்டியல் காணிக்கை ரூ. 57 லட்சம்

உண்டியல் எண்ணும் பணிகளை பார்வையிடும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி

கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் உள்ள அத்தி வரதர் கோவில் என புகழ் பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர், உற்சவர், தாயார், சக்கரத் தாழ்வார், லட்சுமி நரசிம்மர் உள்ளிட்ட சன்னதிகளில் வைக்கப்பட்டுள்ள 11 உண்டியலில் பணம், நகை, வெள்ளி பொருட்கள், போன்றவற்றை காணிக்கையாக செலுத்தி விட்டு செல்வது வழக்கம்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ம் தேதி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்ட நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு, இந்து சமய அறநிலையத் துறை காஞ்சீபுரம் மண்டல இணை ஆணையர் குமரதுரை உத்தரவின்படி காணிக்கை எண்ணும் பணி நேற்று கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

காணிக்கையாக பெறப்பட்ட தங்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு கரன்சி

வரதராஜ பெருமாள் கோவில் நிர்வாக அறங்காவலர் உதவி ஆணையர் ராஜலட்சுமி, காஞ்சிபுரம் மண்டல உதவி ஆணையர் கார்த்திகேயன் முன்னிலையில், திருக்கோவில் ஆய்வாளர் அலமேலு, மேற்பார்வையில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் அலுவலர்களுடன் சேர்ந்து தொண்டு நிறுவன ஊழியர்களும் ஈடுபட்டனர்.

உண்டியல் காணிக்கையாக ரூ.57 லட்சத்து 20 ஆயிரத்து 727 ரொக்க பணமும், 91 கிராம் 340 மில்லி தங்க நகைகளும், 311 கிராம்,750 மில்லி வெள்ளிபொருட்களும் காணிக்கையாக பெறப்பட்டிருந்தது.

மேலும் அமெரிக்க டாலர், கனடா, மலேசியா, அமீரகம் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகளும் உண்டியலில் காணிக்கையாக பெறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top