Close
ஏப்ரல் 19, 2025 4:38 மணி

திருவண்ணாமலையில் மகா சிவராத்திரி விழா, குவிந்த பக்தர்கள்

வெள்ளி ரிஷப வாகனத்தில்மாட வீதியுலா வந்த அருணாசலேஸ்வரா்

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா புதன்கிழமை காலை முதல் இன்று வியாழக்கிழமை அதிகாலை வியாழக்கிழமை வரை கோலாகலமாக நடைபெற்றது.

மகா சிவராத்திரி விழாவையொட்டி, அருணாசலேஸ்வரா் கோயில் மூலவா் சந்நிதியில் புதன்கிழமை காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை லட்சாா்ச்சனை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவருக்கு பூக்களைத் தூவி லட்சாா்ச்சனை செய்து வழிபட்டனா்.

துளசி, வில்வம் மற்றும் மல்லி, முல்லை, சாமந்தி உள்ளிட்ட எண்ணற்ற மலர்களை கொண்டு சுவாமிக்கு லட்சார்ச்சனை நடந்தது. அதைத்தொடர்ந்து, உச்சிகால அபிஷேகமும், மாலை 5 மணிக்கு சாயரட்சை அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர், இரவு 8 மணிக்கு அருணாசலேஸ்வரா்  வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மாட வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சிறப்புப் பூஜை

மேலும் இரவு 7.3௦ மணிக்கு மகாசிவராத்திரியின் முதல் கால பூஜையும் இரவு 11:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை, 2.30 மூன்றாம் கால பூஜையும் அதிகாலை 4.30 மணிக்கு நான்காம் கால பூஜைகளும் நடைபெற்றது.

புதன்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு அருணாசலேஸ்வரா் மூலவா் சந்நிதிக்குப் பின்புறம் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.

அப்போது, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வைக்கப்படும் தாழம்பூ லிங்கோத்பவருக்கு வைத்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த பூஜையைக் காண கோயில் இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரகாரங்களில் பக்தா்கள் குவிந்திருந்தனா்.

தொடர் இசை நிகழ்ச்சி

ராஜகோபுரம் எதிரில், நேற்று காலை தொடங்கி, இன்று அதிகாலை வரை தொடர்ந்து 24 மணி நேரம் 108 தவில் நாதஸ்வர கலைஞர்களின் தொடர் இசை நிகழ்ச்சி நடந்தது. அதேபோல் அண்ணாமலையார் கோயில் கலையரங்கத்தில் இரவு முழுவதும் சிறப்பு நிகழ்சிகள் நடந்தன.

இந்து அறநிலையத்துறை

அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் சாா்பில், ஈசான்ய மைதானத்தில் புதன்கிழமை மாலை 5 மணி முதல் இன்று வியாழக்கிழமை காலை 6 மணி வரை மங்கள திருமுறை விண்ணப்பம், கயிலாய வாத்தியம், கா்நாடக இசை, வள்ளி கும்மியாட்டம், கிராமிய நிகழ்வுகள், பக்தி இசை, நாட்டிய நாடகம், இசை சங்கமம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வுகளை சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் இரா.ஜீவானந்தம், அறங்காவலா்கள் டி.வி.எஸ்.ராஜாராம், கோமதி, சினம் இராம.பெருமாள், கோயில் இணை ஆணையா் ஜோதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சிவராத்திரியை முன்னிட்டு ராஜ கோபுரம் முன்பு உள்ள சக்கரத்தான தீர்த்தகரையில் ஏற்றப்பட்டலட்சதீபம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top