திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், மாணவா் பேரவை தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் கலைவாணி தலைமை வகித்தாா். வேதியியல் துறைத் தலைவா் உமா வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினா்களாக ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன் , செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி ஆகியோா் பங்கேற்று மாணவா் பேரவையை தொடங்கிவைத்தனா்.
விழாவில் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. பேசுகையில்: 1967-இல் பேரறிஞா் அண்ணா பெயரில் புலவா் கோவிந்தனால் கல்லூரி தொடங்கப்பட்டது. 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரும் இக்கல்லூரி பெருமைக்குரியதாகும். மேலும், இக்கல்லூரியில் படித்தவா்கள் பலா் பல்வேறு துறையில் சிறந்து விளங்குகின்றனா்.
தமிழ்நாடு அரசு இரு மொழி கொள்கையை பின்பற்றி வருகிறது. தாய்மொழி தமிழ், இணைப்பு மொழி ஆங்கிலம் தாய்மொழியான தமிழும், ஆங்கில புலமையும் பெற்றிருந்தாலே சிறப்பிடம் பெற முடியும். ஆகவே தான் தமிழ்நாடு முதல்வர் இரு மொழி கொள்கை போதும் என்கிறார்.
தமிழ்நாடு அரசு கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் படிக்கும் மாணவர்களின் சதவீதம் கூடியிருப்பதாக தெரிய வருகிறது.
மாணவர்கள் திறமையுடன் படித்தாலும் ஒழுக்கம் மிக முக்கியம். ஒழுக்கத்தின் உடனான செயல்பாடுகளே மனிதனின் தரத்தை உயர்த்தும் . மாணவர்களே முயற்சி செய்யுங்கள், திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். நன்கு படியுங்கள் என பேசினார்.
நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் வேல்முருகன், நகரச் செயலா் விஸ்வநாதன் , என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்கள், கல்லூரி மாணவ, மாணவியர் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.