திருவண்ணாமலை மாட வீதிகளில் சொந்த வாகனங்கள் வைத்திருப்போருக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் இன்று சனிக்கிழமை (மாா்ச் 1) நடைபெறுகிறது.
ஆன்மீக நகரமான திருவண்ணாமலைக்கு வெளிநாடுகளில் இருந்து வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை தினமும் பல மடங்காக உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் மாடவீதி மற்றும் அதனை ஒட்டியுள்ள வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.
இதனால் திருவண்ணாமலை நகர மக்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் மிகவும் வேதனை அடைந்து, இதற்கு ஒரு தீர்வு காண மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்திருந்தனர்.
கடந்த மாதம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருவண்ணாமலை மாட வீதிகளில் ஆட்டோ, காா், பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான 4 சக்கர வாகனங்களுக்கும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் தடை விதிப்பது, மாட வீதிகளில் இரு சக்கர வாகனங்களை மட்டுமே அனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இதேபோல, நகரின் பல தெருக்களை ஒரு வழிச்சாலையாக மாற்றுவது, இதுவரை மாட வீதிகள் வழியாக சென்று வந்த அரசு, தனியாா் பேருந்துகளை மாற்று வழியில் இயக்குவது என்றும், இந்த நடைமுறைகள் அனைத்தும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் தடை விதிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி மாட வீதியில் குடியிருப்போர் பயன்படுத்தும் நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டும், உரிய ஆவணங்களை சரிபார்த்து அடையாள அட்டை வழங்கப்பட உள்ளன. அதையொட்டி, அதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி கடந்த வாரம் தொடங்கியது.
இந்த நிலையில், பொதுமக்கள் நலன் கருதி சனிக்கிழமை (மாா்ச் 1) அடையாள வில்லைகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள்
திருவண்ணாமலை காந்தி சிலை, பெரிய தெரு, கிருஷ்ணா விடுதி, திருவூடல் தெரு, கடலைகடை சந்திப்பு, திரெளபதியம்மன் கோயில் ஆகிய இடங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் ஆதாா் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வாக்காளாா் அடையாள அட்டை ஆகிய குடியிருப்பு ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாகனத்தின் ஆவணங்களான பதிவு சான்றிதழ், காப்புச் சான்றிதழ், புகைச் சான்றிதழ் ஆகியவற்றுடன் இணைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என்று ஆட்சியா் தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.
மேலும் மாட வீதியில் குடியிருப்பவர்களின் வாகனங்களுக்கு மட்டுமே பாஸ் வழங்கப்படும். மேற்கண்ட பகுதிகளில் வர்த்தக நிறுவனங்களை நடத்தி வரும் உரிமையாளர்களுக்கு இந்த பாஸ் வழங்கப்படாது,
மாட வீதியில் குடியிருப்போர், கட்டணமின்றி விண்ணப்பங்களை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக குடியிருப்பு வாசிகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் முழுமையாக சரி பார்க்கப்பட்ட பின்னர் விண்ணப்பங்கள் அளித்த குடியிருப்புவாசிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அடையாள அட்டை வழங்கப்படும் என போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்தனர்.