Close
மார்ச் 1, 2025 2:40 மணி

வரி வசூலில் முன்னேற்றம் காட்டாத ஊராட்சி செயலாளர் அதிரடி சஸ்பெண்ட், ஆட்சியர் உத்தரவு

ஊராட்சியில் நடைபெறும் பணிகளை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் அரசின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இந்த ஆய்வில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகள் மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், வேளாண் உபகரணங்கள், உயிர் உரங்கள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்வது குறித்தும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்தும் ஆய்வு நடத்தினர்.

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம், தூய்மை பாரத இயக்கத் திட்டம், முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகள், வருவாய் மற்றும் பள்ளி கல்வி துறை செயல்பாடுகள், தேர்ச்சியை அதிகரிக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து துறைவாரியாக ஆய்வு செய்தார்.

ஊராட்சி செயலாளர் அதிரடி சஸ்பெண்ட்

இந்நிலையில் திருவண்ணாமலை செங்கம் மற்றும் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கண்டியாங்குப்பம் ஊராட்சி செயலாளர் தவமணி ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. மேலும் கண்டியாங்குப்பம் ஊராட்சி கணக்குகளை ஆட்சியர் ஆய்வு செய்தபோது வரி வசூல் கணக்கில் ஜீரோ என்று இருந்தது கண்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து ஊராட்சி செயலாளர் தவமணி கிராம வரி இனங்களில் முன்னேற்றம் காண்பிக்காதது மற்றும் உரிய முன் அனுமதி எதுவும் பெறாமல் தன்னிச்சையாக ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளாதது போன்ற காரணத்திற்காக அவரை தற்காலிக பணி நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டார் .

மேலும் செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில் சே நாச்சிப்பட்டு கிராம ஊராட்சியை சேர்ந்த ஊராட்சி செயலாளர் சௌந்தர்ராஜன் கிராம வரி இணக்கங்களில் முன்னேற்றம் காண்பிக்காதது ஊராட்சி கணக்குகள் மற்றும் பதிவேடுகள் முறையாக பராமரிக்க தவறியது ஆகியவற்றை கண்டறிந்த ஊராட்சி செயலாளரை தற்காலிக பணிநீக்கம் செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார்.

மாவட்ட ஆட்சியர் ஆய்வுக் கூட்டத்திலேயே ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட் செய்த சம்பவம் அலுவலர்கள் மத்தியில் பரப்பரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top