Close
மார்ச் 3, 2025 3:07 மணி

பர்மிட் எப்சி இல்லையா? அதிரடியாக அபராதம் விதித்த அதிகாரிகள்..!

சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள்

திருவண்ணாமலையில் விதிமுறைகளை மீறிய ஆட்டோக்களை பறிமுதல் செய்து நான்கு லட்சம் ரூபாய் அதிரடியாக அபராதம் வசூல் செய்த அதிகாரிகளின் செயலை கண்டு பக்தர்கள் திருவண்ணாமலை நகர மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆன்மீக நகரமான திருவண்ணாமலைக்கு வெளிநாடுகளில் இருந்து வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை தினமும் பல மடங்காக உயர்ந்து கொண்டே வருகிறது.

திருவண்ணாமலை நகரில் குறைந்த அளவே ஆட்டோக்கள் இருந்து வந்த நிலையில் தற்போது வெளிமாநில பக்தர்களின் வருகை அதிகரித்ததால் ஆட்டோக்களின் எண்ணிக்கையும் தற்போது முன்பை விட பல மடங்கு அதிகரித்துவிட்டது.

ஆட்டோக்கள் அதிகரித்தது போல் ஆட்டோகளில் பயணிக்கும் ரேட்டும் அதிகரித்துவிட்டது.

குறிப்பாக பேருந்து நிலையம் ரயில்வே நிலையத்திலிருந்து அண்ணாமலையார் கோவிலுக்கு சுமார் 1.5 கிலோமீட்டர் தூரம் செல்வதற்கு 300 ரூபாய் 500 ரூபாய் என ஆட்டோ டிரைவர்கள் கேட்கின்றனர். உள்ளூர் மக்களாக இருந்தாலும் அவர்களுக்கும் இதே ரேட்டு தான்.

சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள்

மேலும் கிரிவலம் ஆட்டோவில் வருவதற்கு 2000 ரூபாயிலிருந்து 3000 ரூபாய் வரை பெறப்படுகிறது என பக்தர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

தற்போது திருவண்ணாமலை நகரில் 2000 க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றது. அதுமட்டுமின்றி வெளியூர் ஆட்டோக்களும் இங்கு வந்து இயக்கப்படுகின்றன. இவர்களால் போக்குவரத்து நெரிசலும், இவர்கள் அதிக வேகத்தில் செல்வதால் பொதுமக்கள் குழந்தைகள் வயதானவர்கள் என அனைவரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனால் திருவண்ணாமலை நகர மக்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் மிகவும் வேதனை அடைந்து, இதற்கு ஒரு தீர்வு காண மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்திருந்தனர்.

இவ்வாறு இயக்கப்படும் ஆட்டோக்கள் மீது மாவட்ட நிர்வாகத்திற்கு அதிக அளவில் புகார்கள் வந்துள்ளது. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கும்படி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன் பேரில் வட்டார போக்குவரத்து அலுவலர் கருணாநிதி தலைமையில் மோட்டார் வாகன முதுநிலை ஆய்வாளர் பெரியசாமி நேர்முக உதவியாளர் பொன் சேகர் மற்றும் அலுவலர்கள் போக்குவரத்து போலீசார் உடன் இணைந்து பேகோபுர தெரு, பெரிய தெரு உள்ளிட்ட இடங்களில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது , உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்டது, தகுதிச் சான்றிதழை புதுப்பிக்காமல் இயக்கியது, அனுமதிச் சீட்டு பெறாமல் இயக்கியது, ஓட்டுநா் உரிமம் இல்லாதது, அதிகப் பயணிகளை ஏற்றிச் சென்றது போன்ற விதி மீறல்கள் கண்டறியப்பட்ட 20 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனா்.

இந்த ஆட்டோக்களில் வந்த பயணிகள் மற்ற ஆட்டோக்களில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனா். பறிமுதல் செய்யப்பட்ட 20 ஆட்டோக்களுக்கு மொத்தம் ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்திய சில ஆட்டோக்கள் மட்டும் விடுவிக்கப்பட்டன. மற்ற ஆட்டோக்கள் விடுவிக்கப்படவில்லை.

பொதுமக்கள் கோரிக்கை

அதிகாரிகளின் இந்த சோதனையால் பக்தர்கள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த சோதனை தொடர்ந்து நடைபெற வேண்டும். 30 நிமிட சோதனையிலேயே 20 ஆட்டோக்கள் சிக்கிய நிலையில் சோதனையை தீவிர படுத்தினால் ஆட்டோக்களை முறைப்படுத்திட முடியும். மேலும் பிரதான சாலைகள் போக்குவரத்து காவலர்களால் தடுப்புகள் அமைத்து தடுக்கப்பட்டுள்ளதால் ஆட்டோக்கள் அனைத்தும் திருவண்ணாமலையில் இருக்கும் சந்துகளில் அதுவும் கிருஷ்ணன் தெரு, குயமட தெரு , சென்னப்பர் தெரு உள்ளிட்ட தெருகளில் அண்ணா சிலை பகுதிகளில் அதிக வேகத்தில் செல்வதாகவும் அப்பகுதிகளில் வீட்டு வாசல்களில் நிறுத்தப்பட்டு உள்ள இருசக்கர வாகனங்களை இடித்துவிட்டு செல்வதாகவும் ஆட்டோ டிரைவர்களுக்கும் அப்பகுதி மக்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. ஆட்டோக்கள் வருவதற்கு முறையான வழிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top