தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் திருவண்ணாமலை மாட வீதியை சுற்றி முதற்கட்டமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.15 கோடி மதிப்பீட்டில் ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு சிமெண்ட் சாலை அமைத்தது.
தொடர்ந்து காந்தி சிலையிலிருந்து ராஜகோபுரம் வழியாக திருவூடல் தெரு மூலை சந்திப்பு வரை சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டாவது கட்டமாக 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் இந்த சிமெண்ட் சாலை பணி அமைக்கும் மாட வீதி சுற்றி பல்வேறு இடங்களில் மின் கம்பங்களும், மின மாற்றிகளும் அதிக அளவு உள்ளது. அதே வேளையில் சாலையின் இரு புறங்களிலும் பக்க கால்வாய்கள் இல்லாமல் உள்ளது.
தற்பொழுது நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி மேற்பார்வையில் கோட்டப்பொறியாளர் ஞானவேல் தலைமையில் உதவி கோட்டப்பொறியாளர் அன்பரசு மற்றும் மின்வாரிய துறை தலைமை பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியில் முதற்கட்டமாக 97 மின் கம்பங்கள் மற்றும் மின் மாற்றிகளை அப்புறப்படுத்தி சிறிய அளவிலான மின்மாற்றிகள் மாடவீதியில் ஆங்காங்கே வைக்கும் பணிகளும்,
அதேபோல் மின் கம்பங்கள் அகற்றப்பட்டு புதை வழித்தட மின் கம்பங்கள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக மின் வயர்களும் பூமிக்குள்செல்லும் வகையில் சாலையின் இரண்டு புறங்களிலும் 5 அடி ஆழம் 4 அடி அகலத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு அனைத்தும் புதைக்கப்பட உள்ளது.
இதற்காக தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை மற்றும் மின்சார வாரியம் ஆகியோர் காலை முதல் மாடவீதியில் கால்வாய் அமைக்கும் பணிகளிலும், மழைநீர் வடிகால்கள் மற்றும் மின் மாற்றிகள் மாற்றி அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். புதைவிட கம்பிகள் அனைத்தும் சரி செய்யப்பட்ட பின்னர் கால்வாய்கள் முழுமையாக சாலையின் இரு புறங்களிலும் போடப்பட்டு, அதேபோல் பாதாள சாக்கடைகள் அனைத்தும் 5 அடி உயரத்திற்கு உயரத்தும் பணிகளும் நடைபெறும்.
இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் மாடவீதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்காக அனைத்து தளவாடப் பொருட்களும் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் பணிகள் துரிதமாக நடைபெற்று, வருகின்ற கார்த்திகை தீபத் திருவிழாவிற்குள் சிமெண்ட் சாலை முழுமையாக போடப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இப்பகுதியில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்படும் என்றும் தெரிவித்தனர்