தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வென்னிமலை அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா ஆண்டு தோறும் 11 நாட்கள் நடைபெறும், இந்தாண்டு திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி அதிகாலை முதல் கணபதி ஹோமம், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கொடியேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல வகையான அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மகா தீபாரதனை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று பகலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வருதல், உச்சிகால பூஜை, மற்றும் பாலாபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 1008 திருவிளக்கு பூஜையும், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி ரத வீதி உலா வருதலும் நடைபெறுகிறது.
தொடர்ந்து விழா 11 நாட்கள் நடைபெறும் நிலையில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக பத்தாம் திருவிழா அன்று சுற்று வட்டார கிராம மக்கள் பால்குடம் எடுத்து வரும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.