ஆன்லைன் வர்த்தகத்திலிருந்து சாதாரண வணிகர்களை காப்பாற்ற சிறப்பு சட்டம் இயற்றிட வேண்டும் என தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரமா ராஜா கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மண்ணுலிங்கம் தலைமை தாங்கினார். கடலூர் மண்டல தலைவர் சண்முகம், மாவட்ட ஆலோசகர் மணி, நிர்வாக செயலாளர் அன்பு, பி.ஆர்.ஓ முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் டாக்டர் ஏ.எம். விக்ரமராஜா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விக்கிரம ராஜா கூறியதாவது: தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பின் 42-ஆவது மாநில மாநாடு மே 5-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் நடைபெறுகிறது. மாநாட்டில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் பங்கேற்க உள்ளனர்.
மாநாட்டில் ஆண்டுதோறும் நகராட்சி, உள்ளாட்சி கடைகளில் வாடகை உயர்வு விகிதத்தை முறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்த உள்ளோம். மாநகராட்சி, நகராட்சிகளில் புதிதாக கட்டப்படும் கடைகளில் ஏற்கெனவே கடை வைத்திருந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
மத்திய அரசு வணிக வரித்துறையில் பல்வேறு வரி குறைப்புகளை ஏற்படுத்த வேண்டும். சட்டங்களை எளிதாக்கி வியாபாரிகளுக்கு அபராதம் என்பதை தடை செய்ய வேண்டும். குப்பை வரி, தொழில் வரி போன்ற வரிகளை வணிகர்கள் மீது சுமத்துவதை தமிழக அரசு தவிர்க்க வேண்டும்.
ஆன்லைன் வர்த்தகத்திலிருந்து சாதாரண வணிகர்களை காப்பாற்ற சிறப்பு சட்டம் இயற்றிட வேண்டும் என்ற பல கோரிக்கைகள் மாநாட்டில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் ஒரு கோடி வணிகர்கள் இருப்பதாகவும் வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத்தேர்தலில் வணிகர்கள் எந்த திசைக்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார்கள் என்றும், வணிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் அரசியல் கட்சிகள் தான் தமிழ்நாடு அரசில் அமையும் என்றார்.
தற்போது தமிழக அரசால் வணிகர்களின் பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளது. மாதம் தோறும் மின்வாரிய கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் மின் அழுத்த நேரத்தில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜ், மாநில தலைமை நிலைய செயலாளர்கள், தாலுகா வியாபாரிகள், நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.