திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சுவாமி தரிசனம் செய்தார்.
முக்கிய சந்ததிகளில் சாமி தரிசனம் செய்த அவர் நவகிரக சன்னதியில் தீபம் ஏற்றி மனம் உருகி வழிபட்டார். அவருக்கு கோயில் சார்பாக சிவாச்சாரியார்கள் பிரசாதங்கள் வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சசிகலா தெரிவிக்கையில்;
தமிழ்நாட்டில் அரசு எவ்வாறு நடக்கிறது என்பது ஊர் அறிந்த விஷயம் தான், எல்லாருக்கும் தெரியும், மாநகராட்சி முதல் கிராமங்கள் வரை இந்த ஆட்சியை பற்றி தெரிந்திருக்கிறது. திமுக அரசு சரிவர செயல்படவில்லை என்பது உண்மை, யாரும் மறுக்க முடியாது, பொதுமக்கள் திமுக நன்றாக ஆட்சி செய்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
தற்போது அரசிடம் எதற்கும் பணம் இல்லை, எதுவும் செய்ய முடியாது, மீதி காலத்தை எப்படியாவது ஓட்டியாக வேண்டும் .இதனால் தான் கூட்டணி கட்சிகளை அழைத்து தொகுதி சீரமைப்பை உடனே நிறுத்த வேண்டும் என்பதை பிரச்சார யுக்தியாக செய்து வருகிறது.
மின்சாரத்தை ஏன் விலைக்கு வாங்குகிறீர்கள். முன்பு அதிமுக ஆட்சியில் அம்மா இருக்கும்போது மின்சாரத்தை வெளி மாநிலத்திற்கு விற்பனை செய்தோம், ஏன் உங்களால் செய்ய முடியவில்லை, அரசு மருத்துவமனையில் டாக்டர்களை மட்டும் நியமித்தால் போதாது செவிலியர்களையும் நியமிக்க வேண்டும்.
விரைவில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி கண்டிப்பாக மலரும் இதில் சந்தேகமே இல்லை.
வடக்கு பகுதியில் மக்கள் தொகை அதிகரித்து தெற்கு பகுதியில் மக்கள் தொகை குறைந்து விட்டது இருக்கிற தொகுதியை குறைப்பது நல்லதல்ல என்று சொல்லி இன்னும் 20 வருடத்திற்கு இதுவே நீடிக்கும் என இந்திரா காந்தி அம்மையார் அப்பொழுது கூறினார்.
வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்திலும் தொகுதி சீரமைப்பு தள்ளி வைக்கப்பட்டது. இப்போதுள்ள பிரதமரும் அதையேதான் செய்வார் என நினைக்கிறேன்.
மத்திய அரசை எதிர்க்க வேண்டும் ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக மத்திய அரசுடன் சண்டை போடுகிற நோக்கிலேயே இருப்பதால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். மத்திய அரசுடன் சண்டை போடவா உங்களிடம் மக்கள் ஆட்சியை கொடுத்தார்கள்? என சசிகலா கூறினார்.