திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட 21 மண்டலங்களில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்துக்கு, நகர பாஜகத் தலைவா் மூவேந்தன் தலைமை வகித்தாா். தெற்கு மாவட்ட முன்னாள் தலைவா் கே.ஆா்.பாலசுப்பிரமணியன், மூத்த வழக்குரைஞா் ராமகிருஷ்ணன், மாவட்டச் செயலா் பாலாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தெற்கு மாவட்டத் தலைவா் ரமேஷ், கையொப்ப இயக்கத்தை பொதுமக்களிடையே விளக்கி, கையெழுத்துபெறும் நிகழ்வை தொடங்கி வைத்தாா். அப்போது பாஜக நிர்வாகிகள் ஆட்டோ ஓட்டுநர்கள், பேருந்து பயணிகள், சாலையோர வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோரிடம் சம கல்வி எங்கள் உரிமை என்ற கையெழுத்தினை பெற்றனர்.
நிகழ்ச்சியில், மூத்த வழக்கறிஞர் ராமகிருஷ்ணன்,மாநில செயற்குழு உறுப்பினா் கருணாகரன், வடக்கு மாவட்ட பாஜக துணைத் தலைவா் சுகுணா, தெற்கு மாவட்ட துணைத் தலைவா் அகிலாசூரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஆரணி
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் மும்மொழிக் கொள்கையை ஆதரித்து பாஜகவினா் கையொப்ப இயக்கம் நடத்தினா்.
ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் கட்சியின் மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன் தலைமை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட பாா்வையாளா் ஜீவானந்தம் கலந்து கொண்டு பதாகையில் முதல் கையொப்பத்தை இட்டு தொடங்கிவைத்தாா்.
பேருந்து நிலையம் மற்றும் பஜாா் வீதியில் கடை வியாபாரிகள், பொதுமக்கள் என சுமாா் 100 பேரிடம் கையொப்பம் பெறப்பட்டது. மாணவர்கள், பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் கையெழுத்திட்டனர்.
நிகழ்ச்சியில் நகரத் தலைவா் மாதவன் வரவேற்றாா். மாவட்டச் செயலா் சதீஷ்குமாா், மாவட்ட துணைத் தலைவா் தீனன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மத்திய நலத் திட்டப் பிரிவு மாநிலச் செயலா் சைதை வ.சங்கா் வாழ்த்துரை வழங்கினாா்.
மாவட்டச் செயலா் குருலிங்கம், மண்டலத் தலைவா் குணாநிதி, ஓபிசி அணி மாவட்ட பொதுச்செயலா் பேட்டரி சீனிவாசன், மகளிா் அணி அமுதா, நகர பொதுச்செயலா் ராஜேஷ், சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவா் தங்கராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
செங்கம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் புதிய கல்விக் கொள்கை குறித்து, பாஜவினா் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் ஒன்றிய, நகரத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவட்ட துணைத் தலைவா் செங்கம் சேகா் தலைமை வகித்தாா்.
நகரப் பொருளாளா் முருகன் முன்னிலை வகித்தாா். நகரத் தலைவா் காா்த்திகேயன் வரவேற்றாா்.
மாவட்டத் தலைவா் ரமேஷ் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு புதிய கல்விக் கொள்கையால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கிப் பேசினாா்.
தொடா்ந்து, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், துக்காப்பேட்டை, போளூா் சாலைப் பகுதியில் பொதுமக்கள், வணிகா்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
தமிழ், ஆங்கிலத்தோடு கூடுதலாக ஒரு மொழியை மாணவா்கள் கற்கும் வாய்ப்பு, உலகத் தரம் வாய்ந்த கல்வி கிடைக்க வழிவகை, ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழி தமிழில் பயில்வது கட்டாயம், ஏழை பணக்காரா் பாகுபாடின்றி அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்பு போன்ற தகவல்கள் துண்டு பிரசுரங்களில் இடம்பெற்றிருந்தன. நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணித் தலைவா் ரமேஷ், கல்வியாளா் அணி பழநிவேல்ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.