முன்விரோதம் காரணமாக புதுச்சேரியைச் சேர்ந்த ரவுடி ஐயப்பன் திருவண்ணாமலை அடுத்த நீலந்தாங்கல் ஏரி கோடி பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
புதுச்சேரியில் பிரபல ரவுடியான ஐயப்பன் மீது கொலை, கொள்ளை, வெடிகுண்டு, விபச்சாரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் புதுச்சேரி காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. புதுச்சேரியின் சரித்திர குற்ற பதிவேட்டு பட்டியலில் உள்ள ஐயப்பன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
பாண்டிச்சேரி காவல்துறையினரின் கெடுபிடியால் திருவண்ணாமலையில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக பதுங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திருவண்ணாமலை அடுத்த நீலந்தாங்கல் ஏரி கோடி பகுதியில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. போலீஸாா் சென்று பாா்த்தபோது, இளைஞரின் உடலின் பல்வேறு இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தன. இறந்து கிடந்த அவரை மா்ம நபா்கள் வெட்டிக் கொன்றது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து காவல்துறை உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (தலைமையிடம்) சிவனுபாண்டியன், துணை காவல் கண்காணிப்பாளா் அறிவழகன், காவல் ஆய்வாளா்கள் கோமளவள்ளி, ராஜா ஆகியோா் சென்று விசாரணை நடத்தினா்.இதையடுத்து, இளைஞரின் சடலத்தை போலீஸாா் மீட்டு, உடல்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில் கொல்லப்பட்டவா் புதுவை மாநிலம், வாணரப்பேட்டை பகுதியைச் சோ்ந்த துரைராஜ் மகன் ஐயப்பன் என்பதும், இவா் பிரபல ரெளடியாக வலம் வந்ததும் தெரியவந்தது.
சம்பவ இடத்தில் காவல் துணைகண்காணிப்பாளர் அறிவழகன் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சிவனு பாண்டியன் விசாரணைமேற்கொண்டு வருகிறார். அது மட்டுமல்லாமல் மோப்பநாய் வீரா வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இதுகுறித்து வேட்டவலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்த ஐயப்பனுக்கு மனைவி ரம்யா, 3 பிள்ளைகள் இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து வேட்டவலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சந்தேகத்தின் பேரில் 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.