108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாக கோவில் கொண்டிருக்கும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆண்டுதோறும் மாசி மாதம் வாலாஜாபாத் அருகே தென்னேரி கிராமத்தில் உள்ள தாத சமுத்திரம் என்று அழைக்கப்படும் தென்னேரி ஏரியில் தெப்பல் உற்சவம் கண்டருள்வது வழக்கம்.
அதன்படி தென்னேரி கிராமத்தில் உள்ள ஏரியில் 100 வது ஆண்டாக நடைபெறும் தெப்பல் உற்சவத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்திலிருந்து புறப்பட்ட வரதராஜ பெருமாள் சுவாமி, நசரத்பேட்டை, முத்தியால்பேட்டை, அய்யம்பேட்டை, கருக்குபேட்டை, ஏகனாம்பேட்டை, திம்மராஜாம்பேட்டை, வெண்குடி, வாலாஜாபாத், வழியாக கட்டவாக்கம், மஞ்சமேடு, விளாகம், குண்ணவாக்கம்,கோவளவேடு, திருவங்கரணை, அயிமிஞ்சேரி,அகரம், உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் வலம் வந்து மண்டகப்படி கண்டருளி தென்னேரி கிராமத்திற்கு வந்தடைந்தார்.
தென்னேரி கிராமத்தில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சன அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மலர் மாலைகள், திருவாபரணங்கள்,அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பின்னர் வேதபாராயண கோஷ்டியினர் பாடிவர, மேளதாளங்கள் முழங்க,தாத சமுத்திரம் என்று அழைக்கப்படும் தென்னேரி ஏரியில் வாழைமரம், மாவிலை தோரணம், மலர் மாலைகள்,மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தவாறு தென்னேரி ஏரியில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்பலில் மூன்று முறை வலம் வந்து உற்சவம் கண்டு அருளினார்.
100-ஆவது ஆண்டாக நடைபெறும் தென்னேரி தெப்பல் உற்சவத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம் மற்றும் தென்னேரி சுற்று வட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை வரை காத்திருந்து காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.