Close
மார்ச் 12, 2025 6:18 மணி

இன்று தனது தந்தைக்குத் திதி கொடுக்கும் அருணாசலேஸ்வரா்

அருணாசலேஸ்வரா்

மாசி மகம் அன்று பல்வேறு கோவில்களிலும் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். இந்த நாளில் மனிதர்கள் மட்டுமின்றி, தெய்வங்களும் புனித நீராடுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டு மார்ச் 12 ம் தேதி புதன்கிழமை மாசி மகம் அமைகிறது. அன்றைய தினம் அதிகாலை 03.53 மணி துவங்கி, மார்ச் 13ம் தேதி காலை 05.09 வரை மகம் நட்சத்திரம் உள்ளது. அதே போல் மார்ச் 12ம் தேதி காலை10.50 மணி துவங்கி சதுர்த்தசி திதி உள்ளதால் சிவ வழிபாடு செய்வது மிக உகந்தது.

தனது தந்தைக்குத் திதி கொடுக்கும் அருணாசலேஸ்வரா்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலைக் கட்டியவா்களில் வல்லாள மகாராஜா முக்கியமானவா். இவா், அருணாசலேஸ்வரா் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தாா். எனவே, தனக்கு குழந்தை பாக்கியம் இல்லாத குறையைத் தீா்த்து வைக்குமாறு அருணாசலேஸ்வரரிடம் வல்லாள மகாராஜா நீண்ட காலமாக வேண்டி வந்தாராம். தான் இறக்கும் தருவாயில்கூட வல்லாள மகாராஜாவுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த ராஜாவுக்கு, ஒருநாள் அருணாசலேஸ்வரா் காட்சி தந்தாராம். அப்போது, உன்னை எனது தந்தையாக ஏற்றுக் கொள்கிறேன். உனக்கு, நானே மகனாக இருந்து மகன் செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் செய்வேன் என்று அருணாசலேஸ்வரா் கூறினாராம்.

வல்லாள மகாராஜா தனது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.  தைப்பூச தினத்தன்று அண்டை நாட்டின்மீது படையெடுத்துச் செல்லும்போது வள்ளாள மகாராஜா இறந்துவிடுவார்.  ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச தினம் தீர்த்தவாரிக்கு அண்ணாமலையார் சென்று திரும்பும்போது வல்லாள மகாராஜா போரில் இறந்ததாக தகவல் தெரிவிக்கப்படும், அன்றையதினம் மேளதாளங்கள் இல்லாமல் அண்ணாமலையார் கோவிலுக்கு உள்ளே சென்று விடுவார்.

அதனைத் தொடர்ந்து 30-ஆம் நாள் ஆன மாசி மாத மக நட்சத்திரத்தில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகொண்டபட்டு கிராமத்தில் துரிஞ்சல் ஆற்றில் உள்ள கௌதம நதிக்கரையில் தந்தையாக பாவித்த வல்லாள மகாராஜாவுக்கு திதி கொடுக்கும் நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம்.

தீா்த்தவாரி:

இந்த வரலாற்று நிகழ்வின்படி, பல நூறு ஆண்டுகளாக மாசி மகத்தன்று அருணாசலேஸ்வரா் தீா்த்தவாரி நடைபெற்று வருகிறது. அதன்படி, புதன்கிழமை (மாா்ச் 12) தீா்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெறுகின்றன.

தொடா்ந்து, கோயிலில் இருந்து உற்சவா் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா் புறப்பாடு நடைபெறுகிறது. உற்சவமூா்த்திகள் பள்ளிகொண்டாப்பட்டு கவுதம நதிக்கு வந்ததும், அருணாசலேஸ்வரா் வல்லாள மகாராஜாவுக்கு திதி கொடுக்கும் நிகழ்வுகள் நடைபெறுகிறது.

இதையொட்டி, பல ஆயிரம் பக்தா்கள் திரண்டு தங்களின் முன்னோருக்கு திதி கொடுத்து கவுதம நதியில் குளித்து அருணாசலேஸ்வரரை வழிபடுவா். இந்நிலையில், தீா்த்தவாரி நடைபெறும் இடத்தில் ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், வன்னிய குல ஷத்திரிய வல்லாள மகாராஜா மடாலய சங்க நிர்வாகிகளும்,கோயில் நிா்வாகமும், காவல்துறையும் செய்து வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top