கோயில் நகரம் என கூறப்படும் காஞ்சிபுரம் பல்வேறு புகழ்பெற்ற சைவ வைணவ மற்றும் சமண, பௌத்த திருக்கோயில்கள் அமைந்துள்ளது.
அவ்வகையில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான மண் தலமாக போற்றக்கூடிய ஸ்ரீ எலவார்குழலி உடனுறை ஸ்ரீஏகாம்பரநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளிநாடு மற்றும் வெளி மாநில மற்றும் தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேக பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் திருக்கோயில் வளாகத்தில் உள்ள கோசாலை வளாகத்தில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு புனரமைப்பு பணிகள் நடைபெற்றபோது தெய்வ திருச்சிலையில் கிடைத்ததாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அறிந்த சமூக ஆர்வலர் டில்லி பாபு , மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் திருக்கோயில் வளாகத்தில் முறைகேடாக புனரமைப்பு பணிகள் என்ற பெயரில் நடைபெற்ற போது சிலைகள் கிடைத்துள்ளது அதனை செயல் அலுவலர் மறைக்கும் நோக்கில் செயல்படுவதாகும் இதனை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் திருக்கோயிலில் இன்று காலை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் ஜெயா, நகை சரிபார்பாளர் குமார், தொல்லியல் ஆலோசகர் ஸ்ரீதரன் ஆகியோர் கண்டெடுக்கப்பட்ட சிலையினை ஆய்வு மேற்கொண்டனர்.
தொல்லியல் ஆலோசகர் சிலையில் உள்ள குறியீடுகளை அதற்கான பொருட்கள் உதவியுடன் கண்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து சிலை மீண்டும் முற்றிலுமாக துணிகள் கொண்டு மூடப்பட்டு பாதுகாப்பாக திருக்கோயில் அலுவலகத்தில் வைக்கப்பட்டது.
இதுகுறித்து தொல்லியல் ஆலோசகர் ஸ்ரீதரன் கூறுகையில், இச்சிலை தண்டாயுதபாணி சிலை எனவும், கடந்த இருநூறு ஆண்டுகளுக்கு முந்தையது எனவும், இச்சிலை பாதம், கால் உள்ளிட்ட பகுதிகள் முழுமை பெறாததால் அது வழிபாட்டிற்கு உகந்ததாக இல்லாத காரணத்தால் இது போன்ற நிலை இருந்திருக்கலாம் என தெரிவித்தார்.
ஏற்கனவே இத்திருக்கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அது குறித்து வழக்குகள் நிலுவையில் உள்ளது நிலையில் இது போன்ற சம்பவம் திருக்கோயில் வளாகத்தில் சற்று பரபரப்பு நிலவியது.