திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அடுத்த திருக்கண்டலம் ஊராட்சியில் புகழ்பெற்ற அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகை சமேத திருக்கள்ளீஸ்வரர் திருக்கோவில் உள்ளது.
2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற திருத்தலம் ஆகும். இத்திருகோவிலில் நேற்று இரவு 19-ம் ஆண்டு மாசிதெப்ப திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
இதை முன்னிட்டு கடந்த 10. ஆம் தேதி திங்கட்கிழமை மாலை சுந்தர விநாயகர், முருகன்,வள்ளிதெய்வானை புறப்பாடு நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை மாலை சுக்கிரவல்லி அம்பாள் புறப்பாடு நடைபெற்றது.
மாலை அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகை சமேத திருக்கள்ளீஸ்வரருக்கு திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு கிராம மக்கள் மடவிளாகம் கிராமத்தில் இருந்து தாய் வீட்டு சீதனமாக மஞ்சள், குங்குமம், வளையல், பூ, பழம், புடவை உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் மேள-தாளம் முழங்க கோவிலுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதன் பின்னர், கைலாச வாத்தியம்,மங்கள வாத்தியம் முழங்க, கண்ணை கவரும் வானவேடிக்கையுடன் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பின்னர் அருள்மிகு சோமஸ்கந்தர் அம்பாள் கோவிலில் பிரகார புறப்பாடு நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து கோவிலின் எதிரே உள்ள திருக்குளத்தில் வண்ணமலர்களால், மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்ட தெப்பத்தில் சுவாமி 9 முறை உலா வரும் தெப்பத் திருவிழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இதை முன்னிட்டும், தமிழக முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டும் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான மதன்சத்யராஜ் ஏற்பாட்டில் 3,000 ஆயிரம் பேருக்கு கோவில் வளாகத்தில் மாபெரும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை,எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சத்தியவேலு துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில்,எல்லாபுரம் தெற்கு ஒன்றிய பொருளாளர் கே.எஸ்.எம்.குப்பன், மாவட்ட பிரதிநிதி கே.வி.வெங்கடாசலம், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் தியாகராஜன், நிர்வாகிகள் ஆனந்தன், சரண்ராஜ், முத்துராஜ், தினேஷ், அன்பு மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பல்வேறு கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள்,மகளிர் சுய உதவி குழு பெண்கள், பொதுமக்கள்,பக்தர்கள் என சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மடவிளாகம், திருக்கண்டலம் கிராம பொதுமக்கள், பக்தர்கள், விழா குழுவினர்கள் மிக சிறப்பாக செய்திருந்தனர்.