காஞ்சிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் காந்தி கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு நல் மகப்பேறு கிடைக்க வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான வளைகாப்பு நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆறு வட்டாரங்களில் உள்ள 5896 கர்ப்பிணி தாய்மார்கள் அங்கன்வாடி மையங்களில் பதிவு பெற்று பயனடைந்து வருகின்றனர்.
அனைவரும் சமம் எனும் நோக்கில் சமுதாய வளைகாப்பு விழா தற்போது நடைபெற்று வருகிறது அவ்வகையில் காஞ்சிபுரம் ஒன்றியத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு என்று காஞ்சிபுரம் மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
இதில் தமிழக கைத்தறி துணி நூல் அமைச்சர் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் மேயர் மகாலட்சுமி யுவராஜ் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு நல் மகபேறு கிடைக்க வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார் உள்ளிட்டோர் கர்ப்பிணி பெண்களுக்கு நலங்கு வைத்து வளையல்கள் மாட்டி ஆரத்தி எடுத்து அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
மேலும் அவர்களுக்கு ஐந்து வகையான அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அலுவலர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கர்ப்பிணியின் உறவினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.