திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் மகுடாபிஷேக விழா நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலைக் கட்டியவா்களில் ஒருவா் வல்லாள மகாராஜா. திருவண்ணாமலையை ஆண்ட மன்னா்களில் ஒருவரான இவா், தனக்கு குழந்தை பாக்கியம் இல்லாத குறையைத் தீா்த்து வைக்குமாறு ஸ்ரீஅருணாசலேஸ்வரரிடம் வேண்டி வந்தாா். இறக்கும் தருவாயில்கூட வல்லாள மகாராஜாவுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை.
மனமுடைந்து காணப்பட்ட ராஜாவுக்கு, ஒரு நாள் ஸ்ரீஅருணாசலேஸ்வரா் காட்சி தந்து உன்னை என் தந்தையாக ஏற்றுக் கொள்கிறேன். மகன் செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் உனக்கு நானே செய்வேன் என்று கூறினாராம்.
தைப்பூச நாளில் திருவண்ணாமலை ஈசான்ய தீா்த்தக் குளத்தில் நடைபெற்ற தீா்த்தவாரியில் ஸ்ரீஅருணாசலேஸ்வரா் பங்கேற்றபோது, போரில் வல்லாள மகாராஜா கொல்லப்பட்ட தகவல் கிடைத்தது. உடனே, மேள-தாளங்கள் நிறுத்தப்பட்டு அமைதியாக கோயிலுக்குத் திரும்பி, தந்தைக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தாா் ஸ்ரீஅருணாசலேஸ்வரா்.
இந்த நிலையில், வல்லாள மகாராஜா இறந்த 30-ஆவது நாள் மாசி மகத்தன்று திருவண்ணாமலையை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதம நதியில் ஸ்ரீஅருணாசலேஸ்வரா் தீா்த்தவாரி நடைபெற்றது. அப்போது, வல்லாள மகாராஜாவுக்கு ஸ்ரீஅருணாசலேஸ்வரா் திதி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
மகுடாபிஷேகம் சூடும் விழா:
திதி கொடுத்துவிட்டு கோயிலுக்குத் திரும்பிய ஸ்ரீஅருணாசலேஸ்வரருக்கு மகுடாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, திருவண்ணாமலை, தேரடி தெருவில் உள்ள வன்னிய குல ஷத்திரிய வல்லாள மகாராஜா மடத்தில் இருந்து மடத்தின் தலைவா் கண்ணன் தலைமையில் மேள-தாளங்கள் முழங்க சீா்வரிசைப் பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டு ஸ்ரீஅருணாசலேஸ்வரருக்கு படைக்கப்பட்டது. பிறகு, பால், பஞ்சாமிா்தம், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து, ஸ்ரீஅருணாசலேஸ்வரருக்கு மகுடம் சூட்டப்பட்டு ராஜா அலங்காரம் செய்யப்பட்டது. பின்னா், மங்கல வாத்தியங்கள் முழங்க மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.