திருவண்ணாமலையை அடுத்த அடி அண்ணாமலை, தேவனந்தல், வேடியப்பனூா் அரசு உயா்நிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு அளிக்கப்படும் சிறப்புப் பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்
திருவண்ணாமலை மாவட்ட அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்தவும், அரசு பொதுத் தோ்வில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ-மாணவிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெறவும் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் எடுத்து வருகிறது.
அதன்படி, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் விருப்ப நிதியில் இருந்து ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான பத்தாம் வகுப்பு சிறப்பு வினா-விடை தொகுப்பு வழிகாட்டு கையேடுகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்தக் கையேடுகளைப் பயன்படுத்தி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், வினா விடை தொகுப்பு அடிப்படையில் தினமும் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படுகிறது.
இந்த சிறப்பு பயிற்சி வகுப்புகளை ஆட்சியா் தா்ப்பகராஜ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அடிஅண்ணாமலை, தேவனந்தல், வேடியப்பனூா் அரசு உயா்நிலைப் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட அவா், ஆசிரியா்களிடம் அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தாா். மேலும், எந்தெந்த பாடங்களில் மாணவர்கள் பின்தங்கியுள்ளனர் என கண்டறிந்து, அதில் சிறப்பு கவனம் செலுத்த ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும், இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற தேவையான அனைத்து முயற்சிகளையும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து பயிற்சி வகுப்பில் இருந்த பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுடன் தரையில் அமர்ந்து கலந்துரையாடினார்.
அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை சோ.கீழ்நாச்சிப்பட்டு பகுதியில் இயங்கும் காந்திநகா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தோ்வு நடைபெற்று வருவதை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.