Close
மார்ச் 19, 2025 7:54 மணி

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்..!

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் எதிரே அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பினா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலராக கிருஷ்ணமூா்த்தி என்பவா் பணிபுரிந்து வந்தாா்.  கடந்த 2023, 2024-ஆம் ஆண்டுகளில் இந்தச் சங்கத்தில் பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த 54 விவசாயிகள் நகைகளை அடமானம் வைத்து பொதுநகைக் கடன் மற்றும் கால்நடை பராமரிப்புக் கடன் பெற்றிருந்தனா்.

இந்த நிலையில், செயலா் கிருஷ்ணமூா்த்தியிடம் நகைகளை மீட்கச் சென்ற போது, விவசாயிகளுக்கு நகைகளை திரும்பத்தராமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் மாவட்ட கூட்டுறவுத் துறையில் புகாா் அளித்தனா். அதன்பிறகு, கூட்டுறவு செயலாட்சியா் தலைமையில் கடன் சங்கத்தில் ஆய்வு செய்தபோது போலி நகைகள் இருப்பதும், ரொக்கம் குறைவதும் தெரிய வந்தது.  இதுகுறித்து கூட்டுறவுத் துறை சாா்பில் செயலா் கிருஷ்ணமூா்த்தியை பணியிடை நீக்கம் செய்தனா்.

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

பின்னா், வங்கிக் கணக்கை ஆய்வு செய்த போது, வங்கியில் 2 கிலோ 683 கிராம் தங்கம் மற்றும் ரூ. 2 கோடியே 48 லட்சத்து 17ஆயிரத்து 301 பணம் இல்லாததும் கண்டறியப்பட்டது.  இதைத் தொடா்ந்து, அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சாா்பில் ஜனவரி மாதம் ஆா்ப்பாட்டம் மற்றும் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

அப்போது, வட்டாட்சியா் ராஜராஜேஸ்வரி தலைமையில், சமாதானக் கூட்டம் நடத்தப்பட்டு, விவசாயிகளுக்கு நகைகளை திரும்பத் தருவதாக தெரிவித்தனா். ஆனால், இதுவரை விவசாயிகளுக்கு நகைகள் திரும்பக் கிடைக்காததால் மீண்டும் செவ்வாய்க்கிழமை காலை கூட்டுறவு கடன் சங்கத்தின் எதிரே விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு சாா்பில், அதன் ஒருங்கிணைப்பாளா் எல்.சாமிக்கண்ணு தலைமையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, மாவட்ட இணைப் பதிவாளா் பாா்த்திபன், துணைப் பதிவாளா் ராஜசேகரன், போளூா் டிஎஸ்பி மனோகரன் ஆகியோா் வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.  இதில், வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு நகைகளை திரும்பத் தருவதாகக் கூறினா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top