உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நமது இலக்கினை அடைய முடியும் என்று மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தி பேசினார்.
உணவு பாதுகாப்புத்துறை சார்பாக சிறு தானிய உணவுகள், செறிவூட்டப்பட்ட உணவு குறித்து பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உணவின் தரம் குறித்து அவசியத்தை வலியுறுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவண்ணாமலை, நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு நாட்டுப்புற கலையான பொம்மலாட்டம் வாயிலாக செறிவூட்டப்பட்ட உணவு குறித்து விழிப்பணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் துவக்கி வைத்து பேசுகையில்;
அரிசி, கோதுமை மாவு எண்ணெய், பால் மற்றும் உப்பு போன்ற முக்கிய உணவுப் பொருட்களில் இரும்பு, அயோடின், துத்தநாகம், வைட்டமின்கள் ஏ மற்றும் டி போன்ற முக்கிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைச்சேர்ப்பது உணவு செறிவூட்டல் (Fortification) என்று அழைக்கப்படுகிறது. மனிதர்களின் பிரதான உணவுப் பொருட்களைத் தேர்ந்தெடுத்து செறியூட்டுவதன காரணமாக, ஊட்டச்சத்துகள் மக்களுக்கு சென்றடையும். உணவு செறிவூட்டல் என்பது அத்தியாவசிய நுண்ணூட்டச்சத்துக்களின் நுகர்வை உறுதி செய்வதற்கான வழிகளில் ஒன்றாகும்.
நமது முன்னோர்கள் உணவே மருந்து, மருந்தே உணவு என்ற வாழ்வியலை பின்பற்றி, நாம் என்ன உணவுகளை உண்ண வேண்டும் என்று வழிகாட்டியிருக்கிறார்கள். திருவள்ளுவர் உணவின் முக்கியத்துவம் குறித்து குறள்கள் மூலம் அறிவுறுத்தியுள்ளார். தற்போதைய நிலையில் துரித உணவுகளை அதிகம் உட்கொண்டு நமது உடலை மோசமான நிலையில் வைத்து உள்ளோம்.
தமிழக அரசாங்கமானது செறிவூட்டப்பட்ட உணவின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. நமது உணவு பழக்கம் தான் ஆரோக்கியத்தை திர்மானிக்கிறது . நம் வாழ்க்கையின் இலட்சியத்திற்கு உடல் ஆரோக்கிய முக்கிய பங்காற்றுகிறது.
உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நமது இலக்கினை அடைய முடியும். நாம் உண்ணும் உணவில் சமரசம் செய்து கொண்டால் குறிகோள் அடையமுடியாது. அதனால் அனைவரும் பாரம்பரிய சிறுதானிய மற்றும் சத்தான உணவுகளை உண்ண வேண்டும்.
மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் வாயிலாக அனைவரும் உணவின் முக்கியத்துவம் குறித்து அறிந்துகொண்டு, உடல்நலனை பாதுகாக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக ஆட்சியர் பள்ளி வளாகத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பாக செறிவூட்டப்பட்ட உணவு குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புனார்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட கண்காட்சியை பார்வையிட்டு, செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்துகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் (பொ) செந்தில்குமார், உணவு பாதுகாப்பு அலுவலர் இராமகிருஷ்ணன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் , மாவட்ட கல்வி அலுவலர் (திருவண்ணாமலை) காளிதாஸ், நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் , ஆசிரியர்கள், பள்ளி மாணவிகள் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.