திருவண்ணாமலை மகா தீப மலையில் தியானத்தில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டுப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலக அளவில் புகழ் பெற்ற ஆன்மிக நகரங்களில் ஒன்று திருவண்ணாமலை. இங்குள்ள பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள ஆசிரமங்களை காண தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்தும் வந்து கொண்டிருக்கிறார்கள்.
மேலும் வெளிநாட்டை சேர்ந்த பக்தர்களும் ஆன்மீக சுற்றுலா பயணமாக திருவண்ணாமலைக்கு வந்து மாதக்கணக்கில் இங்கு தங்கி தியானம் செய்கிறார்கள்.
அப்படித்தான் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஜனவரி மாதம் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலப்பாதையில் உள்ள ஒரு ஆசிரமத்தில் தங்கியிருக்கிறார். இவர் கிரிவலப் பாதையில் பல்வேறு இடங்களில் தியானம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் அண்ணாமலை மீது ஏறி தியானம் செய்தால் முக்தி கிடைக்கும் மேலும் ‘மலையில் முக்கியமான சில இடங்கள் உள்ளது. அந்த இடங்களில் அமர்ந்து தியானம் செய்தால் இறைவனின் முழு ஆசியை பெறலாம்.
முக்தியும் கிடைக்கும். அந்த இடங்களுக்கு உங்களை அழைத்து செல்கிறேன்’ என்று சுற்றுலா வழிகாட்டி வெங்கடேசன் என்பவர் கூறியுள்ளார். அதை நம்பிய பிரான்ஸ் பெண், சில நாட்களுக்கு முன் வெங்கடேசனுடன் மலை ஏறிச் சென்றுள்ளார். அங்கு அவரை வெங்கடேசன் பாலியல் வன்கொடுமை செய்தாராம்.

இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், அவரிடம் இருந்து தப்பித்து கூச்சலிட்டபடி கீழே வந்துள்ளார். அவரது சத்தம் கேட்டு அங்கிருந்த மக்கள் வருவதை பார்த்த அந்த நபர் தப்பியோடிவிட்டார். இதையடுத்து இளம்பெண், பொதுமக்கள் உதவியுடன் திருவண்ணாமலை காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.
போலீசார் விசாரணை நடத்தினர். தகவலறிந்த எஸ்பி சுதாகர், காவல்நிலையம் வந்து விசாரணை நடத்தினார். மேலும், பாதிக்கப்பட்ட பிரான்ஸ் பெண்ணை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து விசாரித்து வருகின்றனர்.
பின்னர், தனிப்படை அமைத்து திருவண்ணாமலை பேகோபுர தெருவை சேர்ந்த வெங்கடேசன் என்பவரை கைது செய்தனர். விசாரணையில், இவர் கடந்த 15 ஆண்டுகளாக சுற்றுலா வழிகாட்டி எனக்கூறி கொண்டு வெளிநாட்டு பயணிகளிடம் கைவரிசை காட்டி வந்துள்ளார்.
ஆங்கிலம், பிரெஞ்சு உள்பட பல்வேறு மொழிகளை தெரிந்து வைத்துள்ளார். வெளிநாட்டு பெண்ணிடம் பிரெஞ்சு மொழியில் சரளமாக பேசியதால், அதை நம்பி வெங்கடேசனுடன் சென்றது தெரிய வந்தது.
போலீசாரின் பிடியில் இருந்து வெங்கடேசன் தப்பி ஓடியபோது கீழே விழுந்ததில் அவரது கை, கால்கள் உடைந்தது. இதையடுத்து அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தால் திருவண்ணாமலை நகர மக்கள் ஆன்மீக பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.