திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி யில் உழவா் சந்தை சீராக இயங்க நடவடிக்கை எடுக்கக் கோரி, கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், 2009-ல் வேளாண் விற்பனை ம ற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் உழவர் சந்தை திறக்கப்பட்டது. பின்பு வந்த ஆட்சியில் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட உழவர் சந்தை காலப்போக்கில் இயங்காமலே போனது .

விவசாய குறைவு கூட்டங்களில் விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தியதின் பேரில் ஏறத்தாழ 13 ஆண்டுகளுக்குப் பின்பு புதுப்பிக்கப்பட்ட உழவர் சந்தை கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன் அவர்களால் தொடக்கி வைக்கப்பட்டது. ஆனால் விவசாயிகள் யாரும் சரிவர வராததால் உழவா் சந்தை மீண்டும் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
இதனிடையே, உழவா் சந்தை சீராக இயங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்டத் தலைவா் புருஷோத்தமன் தலைமையிலான கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா் உழவா் சந்தை முன் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
அப்போது, பிளாஸ்டிக் கூடையில் காய்கறிகளை வைத்துக் கொண்டு அவா்கள் நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வட்டாட்சியர் அலுவலக சாலை வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் இலவசமாக காய்கறிகளை கொடுத்து பொதுமக்களை ஈர்த்தனர்.
தொடர்ந்து உழவர் சந்தையில் பொதுமக்கள் காய்கறிகளை வாங்குவதன் மூலமாக இடைத்தரகர்கள் இல்லாததால் நுகர்வோர் வியாபாரிகள் என இருவருக்குமே பலனளிக்கும் என பரப்புரையில் தெரிவித்தனர்.
தொடர்ந்து வேளாண் அதிகாரிகளை சந்தித்த அவர்கள் உழவர் சந்தை தொடர்ந்து இயங்க தேவையானவற்றை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தனர். உழவா் சந்தையில் காய்கறி விதைகள் விற்பனை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த நூதன பரப்புரை பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.