காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் வீர மரணம் அடைந்த, வெம்பாக்கத்தைச் சோ்ந்த ராணுவ வீரரின் உடல், அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் குளத்து தெருவைச் சோ்ந்தவா் ஓய்வு பெற்ற காவலா் ஜீவகன். இவரது மகன் வினோத்குமாா் . இவா், காஷ்மீா் பகுதியில் உள்ள 62-ஆவது படைத்தளத்தில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்தாா். இவருக்கு நா்மதா, என்கிற மனைவியும், ரஷிதா, கீா்த்தனா என்ற மகள்களும் உள்ளனா்.
வினோத்குமாா் கடந்த 18-ஆம் தேதி மாலை காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் குண்டுக் காயமடைந்தாா். இதைத் தொடா்ந்து ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா், இரு தினங்களுக்கு முன்பு வீர மரணம் அடைந்தார்.

பின்னர் காஷ்மீரில் இருந்து அவரது உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து நேற்று அதிகாலை வெம்பாக்கத்துக்கு ராணுவ வாகனத்தில் கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் பாா்வைக்காக வைக்கப்பட்டது.
வினோத்குமாரின் உடலுக்கு செய்யாறு சாா் -ஆட்சியா் பல்லவி வா்மா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சிவனுபாண்டி, 62-ஆவது ராணுவப் பிரிவின் தலைமை அலுவலா் ஈஸ்வரசிங், செய்யாறு டிஎஸ்பி சண்முகவேலன், வெம்பாக்கம் வட்டாட்சியா் துளசிராமன், ராணுவ காவல் உதவி ஆய்வாளா் கோபால் திரிபாதி மற்றும் கிராம மக்கள் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.
அதேபோல, வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் 150 மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் வீர வணக்கம் செலுத்தினா். வெம்பாக்கம் பகுதியில் உள்ள மயானத்துக்கு ராணுவ வாகனத்தில் வினோத்குமாரின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு உடலுக்கு 21 குண்டுகள் முழங்க ராணுவ இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.இதைத் தொடந்து மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.
காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் ராணுவ வீரர் வினோத்குமார் வீர மரணம் அடைந்ததார் என்ற பெருமை கொண்டாலும், மறுபக்கம் அக்கிராமமக்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சோகத்தில் மூழ்கியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.